செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நமது நிருபர்

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக் கோரியும் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை (மே 16) நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் கடந்த மே 6- ஆம் தேதி விசாரித்தது. அப்போது, அமலாக்கத் துறையின் தரப்பில், இந்த விவகாரத்தில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜால் புய்யான் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மற்றொரு வழக்கு விசாரணைக்காக வேறு சிறப்பு அமர்வில் ஆஜராக வேண்டியிருப்பதால் விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, விசாரணையை வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் அமர்வு பட்டியலிடுவதாகக் கூறியது.

விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞர் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞர்கள் ஆர்யமா சுந்தரம், முகுல் ரோத்தகி ஆகியோர் வாதிடுகையில், "மனுதாரர் செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் 330 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். இதனால், அவரது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டனர்.

அதற்கு நீதிபதி அபய் எஸ்.ஒகா, "மனுதாரர் 300 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதன் காரணமாக அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற உங்கள் வாதத்தில் நாங்கள் உடன்படவில்லை. ஒருவர் முழுத் தண்டனைக் காலத்தில் பாதிக்கு மேல் சிறையில் அனுபவித்த பிற வழக்குகளும் உள்ளன' என்று வாய்மொழியாகக் கூறினார்.

துஷார் மேத்தா கூறுகையில், "செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, பாலாஜி தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என்றார்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com