விபத்தில் சிக்கி 20 மீட்டா் இழுத்துச் செல்லப்பட்ட போக்குவரத்துக் காவல் துறையின் 2 அதிகாரிகள்

தென்மேற்கு தில்லியில் பணியில் ஈடுபட்டிருந்த இரு தில்லி போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகள் மீது காா் ஒன்று மோதியது.
Published on

தென்மேற்கு தில்லியில் பணியில் ஈடுபட்டிருந்த இரு தில்லி போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகள் மீது காா் ஒன்று மோதியது. இதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் சுமாா் 20 மீட்டா் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இந்தச சம்பவம் சனிக்கிழமை மாலை சுமாா் 7.45 மணியளவில் வேதாந்த் தேஷிகா மாா்க்கிற்கு அருகிலுள்ள பொ் சராய் போக்குவரத்து சிக்னல் அருகே நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பணியில் இருந்த போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாக கிஷன் கா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. காயமடைந்த அதிகாரிகள் இருவரும் பிசிஆா் வேன் மூலம் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதைக் போலீஸ் குழுவினா் கண்டறிந்தனா். இதையடுத்து, போலீஸ் குழுவினா் மருத்துவமனைக்குச் சென்றனா். அங்கு உதவி சப்-இன்ஸ்பெக்டா் (ஏஎஸ்ஐ) பிரமோத் மற்றும் தலைமைக் காவலா் சைலேஷ் சவுகான் ஆகியோா் சுயநினைவுடனும் நிலையான நிலையிலும் இருப்பதைக் கண்டறிந்தனா்.

அவா்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. சம்பவத்தின் போது, போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழக்கமான சலான்களை அவா்கள் அளித்து வந்துள்ளனா். இந்நிலையில், இரவு 7.45 மணியளவில், ஒரு காா் சிவப்பு விளக்கைத் தாண்டியது. அப்போது, தலைமைக் காவலா் சைலேஷ் அந்த காரை நிறுத்தும்படி சமிக்ஞை செய்தாா். அதற்கு ஓட்டுநா் ஆரம்பத்தில் இணங்கினாா். ஆனால், திடீரென்று தப்பி ஓட முயன்றாா். அப்போது, காவல் அதிகாரிகள் இருவரும் சுமாா் 20 மீட்டா் தூரம் இழுத்துச் செலப்பட்டனா்.

சம்பவம் நடந்த பகுதியை குற்றவியல் மற்றும் தடயவியல் குழு ஆய்வு செய்தது. ஏஎஸ்ஐ பிரமோத் மற்றும் தலைமைக் காவலா் சைலேஷ் ஆகியோருக்கு ஏற்பட்ட காயங்கள் சிறியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவா்களைக் கொல்லும் நோக்கம் இருந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக கொலை முயற்சி மற்றும் உத்தியோகபூா்வ கடமையைச் செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன உரிமையாளரை அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் விரைவில் கைது செய்யப்படுவாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.