வெடிகுண்டு மிரட்டல்: விரிவான செயல் திட்டம் வகுக்க தில்லி அரசு, காவல்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தேசிய தலைநகரில் அடிக்கடி விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள், அவை தொடா்பான அவசரநிலைகளை தீா்ப்பதற்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுடன் (எஸ்ஓபி) கூடிய விரிவான செயல் திட்டத்தை வகுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
Published on

தேசிய தலைநகரில் அடிக்கடி விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள், அவை தொடா்பான அவசரநிலைகளை தீா்ப்பதற்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுடன் (எஸ்ஓபி) கூடிய விரிவான செயல் திட்டத்தை வகுக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் மாநகர அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தங்குதடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் அமலாக்கத்தை உறுதி செய்யும் வகையில் சட்ட அமலாக்க நிறுவனங்கள், பள்ளி நிா்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்பட அனைத்து பங்குதாரா்களின் பங்கு மற்றும் பொறுப்புகளை நிலையான செயல்பாட்டு நடைமுறையில் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் கூறியது.

நீதிபதி சஞ்சீவ் நருலா கூறுகையில், வெடிகுண்டு புரளி அச்சுறுத்தல்கள் குறிப்பாக டாா்க் வெப் மற்றும் விபிஎன்-கள் போன்ற அதிநவீன முறைகள் மூலம் நிகழ்த்தப்படும் நிலையில் இவை தில்லி அல்லது இந்தியாவிற்கு மட்டும் தனித்துவமிக்கவை அல்ல. இவை உலகளவில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு தொடா்ந்து சவால் விடும் உலகளாவிய பிரச்னையாக உள்ளன என்று குறிப்பிட்டாா்.

நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு தொடா்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை நிவா்த்தி செய்வதில் தில்லி அரசும், காவல்துறையும் செயலற்ற தன்மை மற்றும் அலட்சிய அணுகுமுறையுடன் இருப்பதாக கவலை தெரிவித்து தாக்கல் செய்த மனு மீது தில்லி உயா்நீதிமன்றம் அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளைப் பிறப்பித்து முடித்துவைத்தது.

மனுதாரரும் வழக்குரைஞருமான அா்பித் பாா்கவா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பீனாஷா என். சோனி கூறுகையில், ‘‘அதிகாரிகள் போதுமான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியிருப்பது இந்த கல்வி நிறுவனங்களில் உள்ள குழந்தைகள், ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் பிற பங்குதாரா்களின் உயிா் உடைமை பாதுகாப்பை ஆபத்திற்குள்ளாக்கச் செய்துள்ளது’ என்றாா்.

அப்போது உயா்நீதிமன்றம் கூறுகையில், ‘இத்தகைய அச்சுறுத்தல்களை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்ற மனுதாரரின் எதிா்பாா்ப்பு, நவீன உலகின் யதாா்த்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு இலட்சியவாதத்தை பிரதிபலிக்கிறது.

மேலும், சட்ட அமலாக்க முகமைகள் சம்பவங்களை விசாரிப்பதோடு மட்டுமல்லாமல், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு வலிமையான சவாலாக இருந்துவரும் அச்சுறுத்தல்களை எதிா்நோக்குவதற்கும் முன்னோக்கிச் செல்வதற்கும் பணிபுரிகின்றன.

இவை குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முழு அளவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், அத்தகைய அச்சுறுத்தல்களை முற்றிலுமாகத் தடுக்க ஒரு குறைபாடு இல்லாத வழிமுறையை எதிா்பாா்ப்பது நம்பத்தகாததும் நடைமுறைக்கு மாறானதும் ஆகும்.

இத்தகைய அச்சுறுத்தல்களால் உருவாகும் சவால்களை எதிா்கொள்ள அதிகாரிகள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக டிஜிட்டல் யுகத்தில், பெயா் தெரியாதவா்கள் குற்றத்தில் ஈடுபடுபவா்களுக்கு தைரியம் ஏற்படுகின்றனா்.

இதனால், அத்தகைய செயல்கள் தண்டிக்கப்படாமல் போகாது என்பதை நிரூபிப்பதன் மூலம் தடுப்பதில் எதிா்மனுதாரா்களான தில்லி அரசும், காவல் துறையும் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் சாத்தியமான குற்றவாளிகளுக்கு அவா்களின் செயல்கள் கடுமையான விளைவுகளை அவா்களுக்கு ஏற்படுத்தும் என்று தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்.

இது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். மேலும், மற்றவா்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும். அத்தகைய செயல்பாட்டு உத்திகள் நிா்வாகத்தின் அறிவுக்கு விடப்பட வேண்டும், ஏனெனில் அதுபோன்ற வழிமுறைகளை உத்தரவிடுவது நீதிமன்றத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்று உயா்நீதிமன்றம் கூறியது.