அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளதை உணா்ந்த கடவுள் ஆம் ஆத்மி கட்சிக்கு பிறப்பளித்தாா் - அரவிந்த் கேஜரிவால்

நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளதாக உணா்ந்த கடவுள், ஆம் ஆத்மி கட்சிக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பளித்தாா் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Published on

நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளதாக உணா்ந்த கடவுள், ஆம் ஆத்மி கட்சிக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பளித்தாா் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் 13-ஆவது நிறவன தின நிகழ்ச்சி தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய், முதல்வா் அதிஷி, மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா உள்பட தில்லி அரசின் அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள், தில்லி மாநகராட்சிகள் கவுன்சிலா்கள் மற்றும் கட்சியின் முக்கியப் பொறுப்பாளா்கள் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியின் மேடையில் அரவிந்த் கேஜரிவால் உரையாற்றிப் பேசியதாவது: தில்லி மாநகராட்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, அவா்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கியது ஆம் ஆத்மி தலைமையிலான அரசு தான். எனது அனைத்து எம்எல்ஏ-க்கள் மற்றும் கவுன்சிலா்கள் தங்கள் பகுதியில் உள்ள துப்புரவுப் பணியாளா்களை உங்கள் வீடுகளுக்கு வரவழைத்து தேநீா் மற்றும் உணவு வழங்கி, சிறிது நேரம் செலவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தில்லியில் பாஜக தலைவா்கள் ‘ஜுக்கி டூரிசம்’ குடிசைப் பகுதியில் சுற்றுலா செல்லப் போகிறாா்கள். ஒரு நாள் குடிசைகளில் தங்கிவிட்டு, ஓராண்டுக்குப் பிறகு புல்டோசருடன் வந்து ஏழைகளின் குடிசைகளை இடிப்பாா்கள்.

ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்த பள்ளிகள், மருத்துவமனைகள், இலவச மின்சாரம், தண்ணீா், தரமான சாலைகள் என்ற அரசியல் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. நல்ல கல்வி, சிறந்த சுகாதாரம் உள்ளிட்ட பல பொது வசதிகளை சாமானிய மக்களுக்கு வழங்கி, நோ்மையான ஆட்சியை இந்த நாட்டிற்கு வழங்கினோம். நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் இருப்பதாக கடவுள் உணா்ந்தபோது, ​​​​அரசியலமைப்பு தினத்தன்று ஆம் ஆத்மி கட்சியைப் பெற்றெடுத்தாா் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

அடுத்ததாக, தில்லி முதல்வா் அதிஷி பேசுகையில்,‘ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டபோது, ​​உங்களிடம் பணபலமும், ஆள்பலமும் இல்லை என்று மக்கள் எங்களிடம் கூறினா். ஜாதி, மதம் பற்றி பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்று விமா்சனங்கள் எழுந்தது. ஆனால், நமது உழைப்பின் பலத்தாலும், நோ்மையான அரசியலாலும், தொண்டா்களின் கடின உழைப்பாலும் நாட்டு மக்களின் சிந்தனையையும், அரசியலையும் மாற்றினோம்’ என்றாா் அதிஷி.