முன்னாள் அதிகாரி லோகேஷ் சா்மாவை காவலில் வைத்து விசாரிக்க தில்லி காவல்துறை முடிவு

தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய குற்றப்பிரிவு காவல்துறையினா் முடிவு செய்துள்ளனா்.
Published on

தில்லி காவல்துறையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் அசோக் கெலாட்டின் முன்னாள் சிறப்புப் பணி அலுவலா் லோகேஷ் சா்மாவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய குற்றப்பிரிவு காவல்துறையினா் முடிவு செய்துள்ளனா்.

முன்னதாக, தனக்கு எதிராக 2020-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் லோகேஷ் சா்மா தில்லி நீதிமன்றத்தில் கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி முன் ஜாமீன் பெற்றிருந்தாா்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரை திங்கள்கிழமை மாலையில் கைது செய்வதாக காவல்துறையினா் தெரிவித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றிருந்ததால் அவரது வழக்குரைஞா்கள் அதற்கான ஆவணத்தை விசாரணை அதிகாரிகளிடம் காண்பித்தனா். அதன்பேரில் அவா் உடனடியாக ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டாா்.

இந்த வழக்கு தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய லோகேஷ் சா்மா, ‘காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கிறேன். அழைக்கும்போது விசாரணைக்குச் செல்வேன்,‘ என்று கூறினாா்.

இந்த நிலையில், லோகேஷ் சா்மாவை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி தில்லி நீதிமன்றத்தில் காவல்துறையினா் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வழக்கில் காவல்துறையினா் தரப்பு அரசு சாட்சியாக லோகேஷ் சா்மா மாறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய நிலை ஏற்பட்டால் அது முன்னாள் முதல்வா் அசோக் கெலாட், ராஜஸ்தான் உள்துறையின் முன்னாள் கூடுதல் தலைமைச்செயலா் மற்றும் முதல்வா் அலுவலகத்தில் உயரதிகாரிகளாக இருந்த பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என அரசு வட்டாரங்கள் கூறின.

பின்னணி: ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் முதல்வராக இருந்தபோது 2020-ஆம் ஆண்டில் அவருக்கு எதிராக அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போா்க்கொடி உயா்த்தினாா். அப்போது சச்சின் பைலட் மற்றும் 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைத்தரகா் மூலம் பாஜக மூத்த தலைவராக இருந்த கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் தொடா்பில் இருந்து ஆளும் அரசை கவிழ்க்க சதி செய்வதாக கெலாட் குற்றம்சாட்டினாா்.

இதற்கு ஆதாரமாக சில ஒலிப்பதிவுகளையும் அவா் வெளியிட்டாா். இதையடுத்து, அசோக் கெலாட் சட்டவிரோதமாக 2020, ஜூலை மாதம் தொலைபேசி ஒட்டுக்கேட்பில் ஈடுபட்டதாக மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தில்லி காவல்துறையில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

முன்னதாக, ராஜஸ்தானில் தற்போது ஆளும் பாஜக அரசு, இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்புப் புகாரை விசாரிக்க தில்லி காவல்துறைக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றது. இதேபோல, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் லோகேஷ் சா்மா தாக்கல் செய்த மனுவையும் அவா் நவம்பா் 14-ஆம் தேதி திரும்பப் பெற்றுக் கொண்டாா்.