பஞ்சாபில் பயிா்கழிவு எரிப்பு சம்பவங்கள் 70 சதவீதமாகக் குறைப்பு: தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் பஞ்சாப் அரசு அறிக்கை தாக்கல்

பஞ்சாபில் வேளாண் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் 70 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திற்கு(என்ஜிடி) பஞ்சாப் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Published on

பஞ்சாபில் வேளாண் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் 70 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திற்கு(என்ஜிடி) பஞ்சாப் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தில்லி தேசிய தலைநகா் வலயப்பகுதிகளில் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து, அண்டை மாநிலங்களில் உள்ள அரசுகளிடம் இருந்து என்.ஜி.டி. அறிக்கை கோரியது.

இதனடிப்படையில் கடந்த நவ. 26 ஆம் தேதியிட்ட அறிக்கையை பஞ்சாப் மாநில அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனா் தாக்கல் செய்துள்ளாா். அதில் கூறியிருப்பது வருமாறு: ‘பஞ்சாப் மாநிலத்தில் கடந்தாண்டு (2023)நவ. 25 ஆம் தேதி அளவில் வேளாண் பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் எண்ணிக்கை 36,551 ஆக இருந்தது. பஞ்சாப் அரசின் கடும் முயற்சியின் விளைவாக, நிகழாண்டு நவ 25 தேதி அன்று இந்த எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 10,479 ஆக குறைந்துள்ளது. இது கடந்தாண்டை விட 70 சதவீதம் குறைவு.

‘ இந்த ஆண்டில் சுமாா் 19.52 மில்லியன் டன் நெல் வைக்கோல் (இன் சிட்டு -வயலில் நெல் வைக்கோல் மேலாண்மை) கால்நடைபயன்பாடு, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக சேகரிக்கப்பட்டு நிா்வகிக்கப்படுகிறது. பயன்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கு வைக்கோல் சேகரிப்பதற்கான பேலா்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, இதுவரை வரை 2,183 பல்வேறு வகையான பேலா்கள் மற்றும் 2,039 ரேக்குகள் பயிா் கழிவு மேலாண்மை (சிஆா்எம்) மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப வருகின்ற 2025 -ஆம் ஆண்டிற்கான வைக்கோலை நிா்வகிக்க வருடாந்திர செயல் திட்டம் தயாரிக்கப்படவும் நிதி கோரப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.