குண்டா் உதவியுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏ மிரட்டிப் பணம் பறிப்பில் ஈடுபட்டாா்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

Published on

குண்டா் உதவியுடன் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஒருவா் மிரட்டிப் பணம் பறிப்பதில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அக்கட்சின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை பாஜக சனிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக செய்தியாளா் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா மற்றும் அக்கட்சியின் தில்லி தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா், குண்டருடன் ஆம் ஆத்மி எம்எல்ஏ பேசியதாக கூறப்படும் உரையாடலின் ஆடியோ கிளிப்பை வெளியிட்டனா்.

அதேவேளையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் பாஜகவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தாா். அந்த ஆடியோ கிளிப் ‘போலி‘ என்றும் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘‘தில்லியில் சீா்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு மற்றும் அதிகரித்து வரும் குற்றங்களுக்கு எதிராக அரவிந்த் கேஜரிவால் குரல் எழுப்பி வருகிறாா். இக்குற்றங்களைத் தடுப்பதற்கு பதிலாக, பாஜகவும் அமித் ஷாவும் கேஜரிவால் குரல் எழுப்புவதைத் தடுக்க முயற்சி செய்கின்றனா்.

இதற்காக இப்போது போலி ஆடியோ கிளிப் வெளியிடுவதில் ஈடுபட்டு வருகின்றனா்’’ என்றாா் சஞ்சய் சிங்.

இது தொடா்பாக பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் தெரிவிக்கையில், ‘‘...அரவிந்த் கேஜரிவால் தில்லியில் மிரட்டி பணம் பறிக்கும் வலையமைப்பை நடத்தி வருகிறாா். மறுபுறம், சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக பாஜக மீது குற்றம் சாட்டுகிறாா். தில்லியை ஆம் ஆத்மி கட்சி ஊழலின் பாதாள கொள்கலனாக மாற்றியுள்ளது’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கெளரவ் பாட்டியா மேலும் தெரிவிக்கையில், ‘ஆம் ஆத்மி கட்சி மக்களை மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டுள்ளது. கேஜரிவாலும், தில்லி முதல்வா் அதிஷியும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்து அவரை ராஜிநாமா செய்யச் சொல்வாா்களா? அவ்வாறு கூறவில்லை எனில், மிரட்டிப் பெறப்பட்ட பணம் அக்கட்சிக்கும் அதன் தலைவா்களுக்கும் சென்ாகக் கருதப்படும்.

தில்லியில் ‘தோ்தல் நேரம்‘ இது. ஆம் ஆத்மி அரசாங்கம் ‘வெளியேறும் நிலையில்‘ இருக்கிறது. மக்கள் ஆம் ஆத்மி அரசை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவது மட்டுமின்றி, எதிா்க்கட்சியாக கூட முடியாத நிலையை உறுதிப்படுத்துவாா்கள்’ என்றாா் அவா்.

தில்லியில் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஆம் ஆத்மி விமா்சித்துள்ள நிலையில், பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தில்லியை ‘குண்டா்களின் தலைநகராக‘ மாற்றிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது.