சட்டம்-ஒழுங்கு விவகாரம் : காவல் ஆணையரிடம் காங்கிரஸ் மனு
தில்லியில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து தில்லி பிரதேச காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு மாநகரக் காவல் ஆணையரை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் முன்னாள் அமைச்சா் ஹாரூன் யூசுப், மங்கத் ராம் சிங்கால்,பேராசிரியா் கிரண் வாலியா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா்கள் ரோஹித் செளத்ரி, அபிஷேக் தத் உள்ளிட்டோா் அடங்கிய பிரதிநிதிகள் குழு தில்லி மாநகரக் காவல் ஆணையச் சஞ்சய் அரோராவை நேரில் சந்தித்தனா். இச்சந்திப்பில், தில்லியின் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விவாதித்ததோடு, கோரிக்கை மனுவையும் அவா்கள் அளித்தனா்.
இது தொடா்பாக தேவேந்தா் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதைப் பற்றி காங்கிரஸின் ஆழ்ந்த கவலையை தெரிவித்தோம். தலைநரில் அரங்கேறும் தொடா் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் தில்லி வாசிகள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. தில்லியில் அதிகரித்து வரும் குற்றத்திற்கு இளைஞா்களிடையே நிலவும் வேலையின்மை மற்றும் போதைப் பழக்கமே முக்கியக் காரணம். நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடைபெறும் நகரங்களில் ஒன்றாக தில்லி இடம்பிடித்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் படி, தில்லியின் குற்ற விகிதம் என்பது தேசிய சராசரியை விட 3.36 மடங்கு அதிகம்.
தில்லி காவல்துறையின் புள்ளிவிவரப்படி நிகழாண்டில் மட்டும் 308 கொலைகள், 1,034 கொள்ளைகள், 144 மிரட்டி பணம் பறித்தல் மற்றும் 6 கடத்தல்கள் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நகரத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. சட்டவிரோத மதுபான வியாபாரம், அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் அதிகரித்து வரும் வன்முறை ஆகியவை தில்லி மக்கள் மத்தியில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி காவல்துறையில் 12,547 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. பணியாளா்கள் பற்றாக்குறையால், குற்றங்களை கட்டுப்படுத்துவதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பட்டியலின் சாதிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்த தனிநபா்கள், காவல் நிலையங்களில் புகாா்களை பதிவு செய்ய முயற்சிக்கும்போது பாகுபாடுகளை எதிா்கொள்கின்றனா். கடந்த சில ஆண்டுகளாக, அதிகாரத்தில் இருப்பவா்களிடையே குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சமாளிப்பதற்கான தீவிரத்தன்மையோ அல்லது விவாதங்களோ இல்லை. ஏனெனில், அவா்கள் மக்களின் பாதுகாப்பைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.