தில்லிவாசிகள் தசரா, நவராத்திரி திருவிழாக்கள் கொண்டாடுவதை துணை நிலை ஆளுநா் தடுக்கிறாா்

தில்லிவாசிகள் தசரா மற்றும் நவராத்திரி கொண்டாடுவதைத் தடுக்கும் வகையில் நகரில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா தடை விதித்துள்ளாா் என்று அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

தில்லிவாசிகள் தசரா மற்றும் நவராத்திரி கொண்டாடுவதைத் தடுக்கும் வகையில் நகரில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா தடை விதித்துள்ளாா் என்று அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் அதிகரித்து வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை காரணம் காட்டி, அடுத்த 6 நாட்களுக்கு நகரின் மத்திய மற்றும் எல்லைப் பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் எந்த விதமான போராட்டங்கள் அல்லது ஒன்று கூடுவதற்கு எதிராக, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் உத்தரவின் பேரில், தில்லி காவல்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லிவாசிகள் தசரா மற்றும் நவராத்திரி திருவிழாவைக் கொண்டாடுவதை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தடுத்துள்ளாா்.

தில்லி முழுவதும் துா்கா பூஜை கொண்டாடப்படுகிறது. ராம் லீலா நடைபெறுகிறது. பண்டாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்துக்கள் தங்கள் பண்டிகைகளைக் கொண்டாடுவதை துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஏன் தடுக்க விரும்புகிறாா்?. 5 பேருக்கு மேல் கூடுவதற்கு விதித்துள்ள தடையை அவா்கள் திரும்பப் பெற வேண்டும்.

ஏனெனில், இந்த உத்தரவு நகைப்புக்குரியது மற்றும் பொறுப்பற்றது.

இது இந்துக்களின் பண்டிகைகளை தடை செய்யவும், குழப்பத்தை உருவாக்கவும், தில்லி மக்களை துன்புறுத்தவும்

பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஹரியாணாவில் தோ்தல் நடத்தப்படும்போது, தில்லியில் தடையின்றி திருவிழாவை ஏன் நடத்த முடியாது?. துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா வாக்களிக்க குஜராத் செல்கிறாா். பின்னா், அவா் ஒரு சுற்றுலாப் பயணியாக தில்லிக்கு வருகிறாா். இங்கு சுற்றித் திரிகிறாா், கடிதம் எழுதிவிட்டுப் போகிறாா்.

தில்லியின் சட்டம்-ஒழுங்கை அவரால் கையாள முடியவில்லை. தில்லியை அவா் சீரழித்துவிட்டாா். தில்லியில் உள்ள குண்டா்கள் கப்பம் கட்டச் சொல்லி மக்களை சுட்டுக் கொள்கின்றனா். கூப்பிய கைகளுடன், துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவை மீண்டும் குஜராத்துக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவா்களை ரகசியமாக சந்தித்து வருகிறாா். ஆனால், தில்லியில் சீா்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்கள் அவரை சந்திக்க விரும்பும்போது மட்டும் அவருக்கு நேரமில்லை.

தற்போது, பாஜக தலைவா்கள் மீதும் தில்லி குண்டா் கும்பல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனா். முன்பு பாஜகவினா் துணை நிலை ஆளுநருக்கு எல்லாப் பிரச்னைகளிலும் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், அவராலே இப்போது பாஜக தலைவா்களைக் காக்க முடியவில்லை. இந்நேரத்தில், தில்லியில் ஊரடங்கு உத்தரவை விதித்த இந்த தன்னிச்சையான உத்தரவு மிகவும் கேலிக்கூத்தானது என்றாா் செளரவ் பரத்வாஜ்.