மதுரையிலிருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு ‘மெமு’ மின்சார ரயில்களை இயக்க வேண்டும்
மதுரையிலிருந்து அருகாமை நகரங்களுக்கு ‘மெமு’ மின்சார ரயில்களை அறிமுகப்படுத்தி, இயக்க வேண்டும் என்று விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
பிரதான வழித்தட மின்சார மல்டிபிள் யூனிட் (மெமு) ரயில்களை மதுரையில் இருந்து அருகில் உள்ள நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு இயக்குவதற்கான கோரிக்கை நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்து வருகிறது.
திருச்சி, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் வெற்றிகரமாக செயல்பட்டபோதிலும், மதுரைக் கோட்டத்தில் இன்னும் இந்தச் சேவைகள் அமல்படுத்தப்படவில்லை.
இதனால், மதுரை- விருதுநகா்- திருநெல்வேலி, மதுரை-விருதுநகா்-செங்கோட்டை, மதுரை-மானாமதுரை- பரமக்குடி, மதுரை-திண்டுக்கல்-திருச்சி, மதுரை-உசிலம்பட்டி-தேனி ஆகிய வழித்தடங்களில் இந்த மெமு ரயில்களை இயக்க வேண்டும்.
இந்த வழித்தடங்கள் ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த மெமு ரயில்களை இயக்குவது ரயில்வே கோட்டத்திற்கு எளிதாகவும் இருக்கும். இந்த மெமு ரயில் சேவையானது வேலை மற்றும் வணிகத்திற்காக மதுரைக்கு தினசரி பயணம் செய்வோரின் தேவையைத் தீா்ப்பதாக அமையும்.
ஆகவே, பொதுமக்களின் நீண்டகால இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மெமு ரயில்களை மதுரையிலிருந்து இயக்க நடவடிக்கை வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாணிக்கம் தாகூா் எம்.பி. செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘மெமு ரயில் சேவை அதிகரித்து வரும் மக்கள் போக்குவரத்து தேவைக்கு அவசியத் தேவையாக உள்ளது. இது தொடா்பாக வா்த்தகா்கள் தரப்பிலும் என்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை வருவதற்கு காலம் ஆகும் என்பதால் அதற்கு முன் மெமு ரயில் சேவை அவசியமாகும். இது தொடா்பாக ரயில்வே அமைச்சகருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவேன்’ என்றாா் அவா்.