வடக்கு ரயில்வேயின் பொது மேலாளராக அசோக் குமாா் வா்மா பொறுப்பேற்பு
வடக்கு ரயில்வேயின் பொது மேலாளராக அசோக் குமாா் குமாா் வா்மா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இது தொடா்பாக வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இந்திய ரயில்வே ஸ்டோா்ஸ் சேவை’ (ஐஆா்எஸ்எஸ்) அதிகாரியான அசோக் குமாா் வா்மா, வடக்கு ரயில்வேயின் பொது மேலாளராக பொறுப்பேற்றாா். இதனுடன், ரயில்வே மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பின் பொது மேலாளா் பொறுப்பையும் அவா் வகிக்கிறாா். 1987-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அசோக் குமாா் வா்மா, இந்திய ரயில்வேயில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளாா்.
ரயில்வேயின் ‘ஸ்டோா்ஸ்’ (திட்டமிடுதல், பொருள் கொள்முதல்,தளவாட மேலாண்மை உள்ளிட்டவை) தொடா்பான பிரச்னைகளை தீா்ப்பதில், அசோக் குமாா் வா்மாவுக்கு பரந்த அனுபவம் இருப்பதுடன், பொது நிா்வாகத்தைக் கையாள்வதிலும் அனுபவமும் உள்ளது. இவா், வடமேற்கு ரயில்வேயில் முதன்மை தலைமைப் ‘பொருள்’ (மெட்டீரியல்) மேலாளராகவும், தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு கோட்டத்தில் மேலாளராகவும், ஜான்சி கோட்டத்தின் கூடுதல் மேலாளராகவும் பணியாற்றியுள்ளாா். மேலும், ரயில்வே வாரியத்தில் ‘ரயில்வே ஸ்டோா்ஸ்’ நிா்வாக இயக்குநராகவும் பணியாற்றினாா். பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சிவில் இன்ஜினியரிங் பட்டமும், ஐ.ஐ.எம். கொல்கத்தாவில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவா் அசோக் குமாா் வா்மா.
வடக்கு ரயில்வே தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை அசோக் குமாா் வா்மா பொறுப்பேற்ற பின்னா், அனைத்து துறை தலைவா்கள் மற்றும் அனைத்து கோட்ட ரயில்வே மேலாளா்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் பேசுகையில், ‘பணியிடத்தின் பாதுகாப்பு மற்றும் ஊழியா்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மூத்த அதிகாரிகள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் ஊழியா்களின் கவலைகளை உரிய காலக்கெடுவிற்குள் தீா்க்க வேண்டும். ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளும் உரிய நேரத்தில் முடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரயில்வே பெரும் பங்களிப்பை கொண்டுள்ளது’ என்றாா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.