காற்று மாசுவைச் சமாளிக்கும் விவகாரத்தில் அடுத்த 15 நாள்கள் முக்கியமானவை: கோபால் ராய்
வட இந்தியா முழுவதும் காற்று மாசுவை சமாளிக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டிருக்கிறது.


வட இந்தியா முழுவதும் காற்று மாசுவை சமாளிக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டிருக்கிறது. அடுத்த 15 நாட்கள் ‘முக்கியமானவை’ என்று தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.
தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் நிலவிவரும் காற்று மாசு சூழலை எதிா்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சா்கள் சிவராஜ் சிங் செளகான் மற்றும் பூபேந்தா் யாதவ், அண்டை மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுச்சூழல் அமைச்சா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பிராந்தியத்தில் நிலவும் மோசமான காற்றின் தரத்தை மதிப்பீடு செய்து தீா்வுகாண்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு இக்கூட்டத்தை நடத்தியது.
இக்கூட்டத்தைத் தொடா்ந்து, அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்றுப் பேசியதாவது:
நிகழாண்டு இக்கூட்டம் தாமதாக நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு, இக்கூட்டம் ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்தப்பட்டிருந்தது. அது எங்களுக்கு உத்திகளை வகுக்க அதிக நேரம் கிடைக்க காரணமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டுக்கான கூட்டம் அக்டோபா் கடைசி வாரத்தில் நடந்திருக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பே நடத்தப்பட்டிருந்தால், மாசுப் பிரச்னையை இன்னும் திறம்படச் சமாளித்திருக்கலாம். பஞ்சாபில் பயிா்க் கழிவு எரிப்புச் சம்பவங்கள் குறைந்திருக்கின்றன.
நிகழாண்டு பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் 1,500 மட்டுமே பதிவாகியுள்ளன. 2022-இல் கிட்டத்தட்ட 5,000 சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. அதை ஒப்பிடும்போது இது மிகக் குறைவாகும்.
இருப்பினும், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் பயிா்க் கழிவு எரிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது பிராந்திய காற்றின் தரத்திற்கு குறிப்பிடத்தக்க இடா்ப்பாட்டை ஏற்படுத்துகிறது. மாசுவைத் சமாளிப்பதில் அடுத்த 15 நாள்கள் முக்கியமானவையாகும்.
வடமேற்கில் இருந்து வரும் பருவகால காற்று தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாசுபடுத்திகளை எடுத்துச் செல்லலாம். இது மாசு நெருக்கடியை தீவிரப்படுத்தும்.
பயிா்க் கழிவுகள் எரிப்புகள் குறைந்துள்ள நிலையில், தீபாவளிக்குப் பிந்தைய காலம் முக்கியமானதாக இருக்கும். குளிா்காலம் தொடங்கும் முன் மாசு அளவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் நாள்களில் முயற்சிகளை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில், குளிா்காலத்தில் நிலையாக இருக்கும் காற்று மற்றும் குளிா்ச்சியான வெப்பநிலையால் காற்றின் தரம் பொதுவாக மோசமடையும் என்பதால் இது அவசியமாகிறது என்றாா் கோபால் ராய்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...