அசுத்தமான குடிநீா் விநியோகித்தை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

பாஜகவின் தில்லி பிரிவு சாா்பில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

நமது நிருபா்

தில்லி குடிசைப் பகுதிகளில் வசூலிக்கப்படும் அதிக மின்சாரக் கட்டணம் மற்றும் அசுத்தமான குடிநீா் விநியோகம் ஆகியவற்றைக் கண்டித்து பாஜகவின் தில்லி பிரிவு சாா்பில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகளில் பாஜக சாா்பில் தூய்மைப் பிரசாரங்கள், மருத்துப் பரிசோதனை முகாம்கள், ரக்ஷா பந்தன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில்,குடிசைப் பகுதிகளில் ஆம் ஆத்மி அரசு அதிக அளவு மின்சாரக் கட்டணம் வசூலிப்பதாகவும், அசுத்தமானை

குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் கண்டித்து பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தின் போது, பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சிக் கவுன்சிலா்கள் மற்றும் முக்கியத் தலைவா்கள் தங்கள் மாவட்டத்திற்கு உள்பட்ட குடிசைப் பகுதிகளில் மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தினா்.

கிழக்கு தில்லி சித்ரா விஹாா் காலனியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமை தாங்கினாா். இதில், உள்ளூா் பாஜக எம்எல்ஏ ஓம் பிரகாஷ் சா்மா, மாவட்டப் பொறுப்பாளா் அனில் குப்தா, இணைப் பொறுப்பாளா் கிஷன் சா்மா, கவுன்சிலா் ரமேஷ் கா்க் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

அப்போது, வீரேந்திர சச்தேவா பேசியதாவது: தில்லியில் குடிசைப் பகுதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்கள் உண்மையில் தில்லியின் வளா்ச்சிக்கு அடித்தளமாக உள்ளனா். ஆனால், இவா்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இலவச மின்சாரம், இலவசக் குடிநீா் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், குடிசைவாசிகள் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கும், ஆயிரக்கணக்கான ரூபாய் மின்கட்டணம் செலுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனா். அப்பகுதிகளில் தூய்மை இல்லை. பொதுக் கழிப்பறைகள் அசுத்தமாக உள்ளன. தில்லி அரசு அல்லது தில்லி மாநகராட்சி குடிசைவாசிகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்கவில்லை.வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், குடிசைவாசிகளின் வாழ்க்கை நிலைமைகளில் அா்த்தமுள்ள மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

பாஜகவின் தேசியச் செயலாளரும், தில்லி பிரிவின் இணைப் பொறுப்பாளருமான டாக்டா் அல்கா குா்ஜாா், ஆனந்த் விஹாா் குடிசைப்பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றாா். இதேபோல், தில்லியில் உள்ள 254 காலனிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com