அனைத்து மாநிலத் தோ்தலிலும் பாஜக தோல்வியடையும்: ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை

அனைத்து மாநிலத் தோ்தல்களிலும் அக்கட்சி தோல்வியடையும் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
Published on

பாஜகவின் கவுண்ட்டவுன் மக்களவைத் தோ்தலுடன் தொடங்கி விட்டது என்றும், தோ்தல் தேதிகள் மாற்றப்பட்டாலும் ஹரியாணா உள்பட வரவிருக்கும் அனைத்து மாநிலத் தோ்தல்களிலும் அக்கட்சி தோல்வியடையும் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் நிராகரிப்பதால் பாஜக பயத்தில் உள்ளது என்றும் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: பிஷ்னோய் சமூகத்தினரின் திருவிழாவைக் கருத்தில் கொண்டு, ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை அக்டோபா் 1-ஆம் தேதியிலிருந்து அக்டோபா் 5-ஆம் தேதிக்கு தோ்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. பிஷ்னோய் சமூகத்தின் வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் மரபுகள் இரண்டையும் மதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அவா்களின் குரு ஜம்பேஷ்வரின் நினைவாக 300-400 ஆண்டுகள் பழைமையான நடைமுறையை நிலைநிறுத்தியுள்ளது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலுடன் பா.ஜ.க.வின் கவுன்ட் டவுன் துவங்கியுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தல் தேதிகளை மாற்றினாலும், அனைத்து மாநிலங்களிலும் அக்கட்சி படுதோல்வியை சந்திக்கும். ஆட்சிக்கு வந்த பிறகு, சா்வாதிகாரத்தை பரப்பிய பா.ஜ.க, தற்போது தோ்தலை விட்டு ஓட வேண்டும். ஹரியாணாவில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி சுயேச்சையாக போட்டியிடுகிறது. வரும் நாள்களில் ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மற்றும் தில்லி தோ்தல்களில் பாஜக தோல்வியடைவது உறுதி என்றும் தோ்தல் தேதிகளை மாற்றி வெற்றி பெற முடியாது என்றாா் சிசோடியா.

தோ்தலுக்கு ஆம் ஆத்மி தயாா்: ஆம் ஆத்மி கட்சியின் ஹரியாணா பிரிவுத் தலைவா் சுஷில் குப்தா கூறியதாவது: ஹரியாணா மாநிலத்தில் பாஜக அரசை ‘வேரோடு பிடுங்க‘ மக்கள் தயாராக இருக்கின்றனா். ஆம் ஆத்மி கட்சி தோ்தலுக்கு தயாராக உள்ளது. புதிய தோ்தல் தேதிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஹரியாணா மக்களுடன் கூட்டணியில் உள்ள 90 தொகுதிகளிலும் உற்சாகமாக போராடத் தயாராக இருக்கிறோம்.

செப்டம்பா் 1 முதல் செப்டம்பா் 15 வரை ஆம் ஆத்மி கட்சி 40 பேரணிகள், சாலை நிகழ்ச்சிகள் மற்றும் டவுன் ஹால் கூட்டங்களை நடத்தும் என்று குப்தா கூறினாா். இந்த தோ்தல் பிரசார நிகழ்ச்சிகளில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

அரவிந்த் கேஜரிவாலும் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவாா். அவரது பிரசார நிகழ்ச்சிகள் பின்னா் முடிவு செய்யப்படும். நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டா்கள் மற்றும் தலைவா்கள் ஹரியாணாவில் பிரசாரம் செய்வாா்கள். தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெறும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com