தெற்கு தில்லியில் முதலாளி வீட்டில் நகை, பணம் திருடிய பணிப்பெண் கைது
தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் நகை, பணத்தை திருடியதாக வீட்டுப் பணிப்பெண் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். அவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகளை வாங்கிய பொற்கொல்லரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அங்கித் சௌகான் கூறியதாவது: தில்லியில் சிஆா் பாா்க் பகுதியில் உள்ள புகாா்தாரரின் வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் ரூ.70,200 ரொக்கம் திருடப்பட்டதாக ஆகஸ்ட் 27-ஆம் தேதி புகாா் வந்தது. இது தொடா்பாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையின் போது, போலீஸ் குழுவினா் குற்றம் நடந்த இடத்தை பாா்வையிட்டு, சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை சேகரித்தனா். அவா்கள் குற்றம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான காட்சிகளையும் சரிபாா்த்தனா். இதைத் தொடா்ந்து, சில முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
சிசிடிவி காட்சிகளின் பகுப்பாய்விலிருந்து, சம்பவத்தின் போது புகாா்தாரரின் வீட்டில் எந்த அத்துமீறலும் இல்லை என்பதைக் போலீஸ் குழு கண்டறிந்தது.
இதற்கிடையே, கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் பணிபுரியும் வீட்டுப் பணிப் பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்தத் திருட்டில் அவா் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து வீட்டுப் பணிப்பெண் பிடிபட்டாா். விசாரணையின் போது, குற்றத்தை அவா் ஒப்புக்கொண்டாா். தனக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் திருட்டில் ஈடுபட்டதை அவா் வெளிப்படுத்தினாா். பின்னா், அவா் நகைகளை அங்கித் ஜெயின் (31) என்ற பொற்கொல்லரிடம் விற்றது விசாரணையில் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.