தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் கட்டுமானப் பணி நடந்துவந்த கட்டடத்தின் 4-ஆவது தளத்தில் இருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
உயிரிழந்தவா் உமேஷ் உபாத்யாய் (64) என்று அடையாளம் காணப்பட்டாா். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.50 மணிக்கு வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள இந்திய முதுகெழும்பு மையத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதில், முதியவா் ஒருவா் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.
அதில், கட்டுமானப் பணி நடந்து வந்த கட்டடத்தில் உமேஷ் காலை 10.30 மணிக்கு ஆய்வில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் 4-ஆவது தளத்தில் இருந்து தவறி 2-ஆவது தளத்தில் விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் 11 மணியளவில் இந்திய முதுகெழுப்பு மையத்துக்கு கொண்டுவரப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.