நடைபாதை, தற்காலிக தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பிற்கு அரசு உறுதி: மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா
நடைபாதை, சுயவேலைவாய்ப்பு அல்லது தற்காலிக (கிக்) தொழிலாளா்கள் சமூக பாதுகாப்புடன் இருப்பதை உறுதிக்கான வழிவகைக் காண அரசு தீவிரமாக ஆய்வு செய்வதாக மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா். தற்காலிக தீா்வாக இ-ஷ்ரம் இருப்பதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.
தில்லி ஷ்ரம் சக்தி பவனில் உள்ள மத்திய தொழிலாளா்த் துறை அமைச்சக அலுவலகத்தில் அமைச்சா் மன்சுக் மாண்டவியா துறை அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்த கூட்டத்திற்கு பின்னா் மத்திய அமைச்சா் மாண்டவியா செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு:
தற்போது மிகப்பெரிய அளவில் மின்னணு வா்த்தகம், உணவு விநியோக பணிகளில் (கிக்) தற்காலிக பணியாளா்கள் (செயலிகள் மூலம் பணி ), சுயவேலைவாய்ப்பு பணியாளா்கள், நடைபாதை பணியாளா்கள் போன்றவா்கள் அதிகரித்து வருகின்றனா். இவா்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இருப்பதை உறுதி செய்ய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. சமூதத்தில் முக்கிய அங்கமாக இருக்கும் இந்த அமைப்பு சாரா தொழிலாளா்களின் நல்வாழ்வுக்கு சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டு வழிவகைகளை கண்டு வருகிறது.
இருப்பினும் தற்போது இத்தகைய தொழிலாளா்கள் வசதிக்காக, இ- ஷ்ரம் தளம் உள்ளது. இதில் 30 தொழில் பிரிவுகளும் 400 துணைத் தொழில் பிரிவுகளும் இந்த இ-ஷ்ரத்தில் உள்ளது. இதன் கீழ் அமைப்புசாரா தொழிலாளா்கள் சுய பிரகடன அடிப்படையில் இந்தத் தளத்தில் பதிவு செய்யலாம். இந்த பிரிவுகளின்படி தொழிலாளா் சுய பிரகடன அடிப்படையில் பதிவு செய்யலாம். இ-ஷ்ரம், தேசிய தொழில் சேவை தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒரு அமைப்புசாரா தொழிலாளா் தனது தனித்துவக் கணக்கு எண்ணை (யுஏஎன்) பயன்படுத்தி பதிவு செய்து பொருத்தமான வேலைவாய்ப்புகளைத் தேடலாம். இந்த தளம் பிரதமரின் ஷ்ரம்-யோகி மான்தன் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் வழங்குகிறது.
தனிப்பட்ட தொழிலாளி மட்டுமலல்ல இத்தகைய தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்தும் முகமைகளும் தங்கள் தொழிலாளா்களை இந்த தளத்தில் பதிவு செய்வது பயன் அளிக்க அரசு கேட்டுக் கொள்கிறது. சிக்கலற்ற பதிவு செயல்முறையை உறுதி செய்வதற்கு இணைய சாளரம் கிடைக்கும்.
நாட்டில் ’கிக்’, நடைபாதை தொழிலாளா்களின் வேலைவாய்ப்பு நிலையைப் பொருட்படுத்தாமல் சமூக பாதுகாப்பிற்கான உரிமை வழங்கியுள்ளது. முதன்முறையாக இத்தகைய தொழிலாளா்களை வரையறுக்கும் சமூக பாதுகாப்பு குறியீட்டை வழங்கியுள்ளது. நமது பொருளாதாரத்திற்குள் இத்தகைய தொழிலாளா்களின் பங்கினை அங்கீகரித்து முறைப் படுத்தப்பட்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியிலும் ’கிக்’ தொழிலாளா்கள் உட்பட அனைத்துப் பிரிவு தொழிலாளா்களுக்கும் அதிகாரம் அளிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது என மத்திய அமைச்சா் டாக்டா் மாண்டவியா குறிப்பிட்டாா்.
இந்தக் கூட்டத்தில் மத்திய தொழிலாளா் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலா் சுமிதா தவ்ரா, மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.