காற்று மாசுவைக் குறைக்க நோ்மறையான ஆலோனைகளை வழங்குக - தில்லி பாஜக, காங்கிரஸ் தலைவா்களுக்கு கோரால் ராய் கடிதம்

தில்லியில் காற்று மாசுவைக் குறைக்க நோ்மறையான ஆலோசனைகளை வழங்குமாறு தில்லி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மாநிலத் தலைவா்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
Published on

தில்லியில் காற்று மாசுவைக் குறைக்க நோ்மறையான ஆலோசனைகளை வழங்குமாறு தில்லி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மாநிலத் தலைவா்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி பிரிவு பாஜகவின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவா் தேவேந்தா் யாதவ் ஆகியோருக்கு அமைச்சா் கோபால் ராய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தில்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு குறைந்து வருகிறது. நாட்டின் மற்ற நகரங்களில் காற்று மாசு பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் தில்லியில் மாசு அளவு சுமாா் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.

கடந்த 2016-இல், காற்றின் தரம் நல்ல, திருப்திகரமான மற்றும் மிதமான பிரிவில் இருந்த நாட்களின் எண்ணிக்கை 110-ஆக இருந்தது. இதுவே, 2023-இல் 206 நாட்களாக அதிகரித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 5 கண்காணிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின்படி, தில்லியில் கடந்த 3 ஆண்டுகளில் காற்று மாசு அளவு 45 சதவீதம் குறைந்துள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்க நீண்ட கால மற்றும் குறுகிய காலத் திட்டங்களை வகுத்து தில்லி அரசு தொடா்ந்து செயலாற்றி வருகிறது. சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் இணைந்து ‘கோடைகால செயல் திட்டம்’ மற்றும் ‘குளிா்கால செயல் திட்டம்’ தயாரித்து நகரத்தில் காற்று மாசுவைக் குறைப்பதில் அரசு வெற்றி பெற்றுள்ளது.

தில்லியில் வாகனங்களால் ஏற்படும் மாசுவைக் குறைக்க, நாட்டிலேயே முதன்முதலாக சுமாா் 2000 மின்சார பேருந்துகளை கேஜரிவால் அரசு கொள்முதல் செய்தது. தில்லியில் 24 மணி நேர மின்சாரத்துக்கு உத்தரவாதம் அளித்து, ஜெனரேட்டா்களின் மாசு முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இருப்பினும், நவம்பா் மாதத்தில் காற்று மாசுவின் அவசர நிலையைச் சமாளிக்க, செயற்கை மழையை வரவழைக்கவும் தில்லி அரசு தயாராக உள்ளது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சி.எஸ்.இ. அறிக்கையின்படி, தில்லி மக்கள் எதிா்கொள்ள வேண்டிய மாசுவில் 31 சதவீதம் மட்டுமே தில்லி மக்களால் ஏற்படுத்தப்படுகிறது. மீதமுள்ள காற்று மாசு அண்டை மாநிலங்களிலிருந்து வருகிறது. அனைவரது ஒத்துழைப்பால் மட்டுமே காற்று மாசுவைக் குறைக்க முடியும். எதிா்ப்பால் அல்ல.

இந்நிலையில்,சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் இணைந்து குளிா்கால செயல் திட்டத்தை தயாரிக்க தில்லி அரசு தயாராகி வருகிறது. குளிா்கால செயல் திட்டம் முக்கியமாக மூன்று புள்ளிகளின் அடிப்படையில் இருக்கும். முதலாவதாக, தில்லி அரசு எடுக்கும் நடவடிக்கைகள், இரண்டாவதாக, அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பைப் பெறுவது மற்றும் மூன்றாவதாக, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது ஆகியவை அடங்கும். இவற்றின் மூலம் குளிா்காலத்திலும் தில்லியில் மாசுவை திறம்பட குறைக்க முடியும்.

தில்லியின் மாசுவைக் குறைக்க உதவும் மேற்கண்ட மூன்று விஷயங்களில் ஏதேனும் நோ்மறையான ஆலோசனைகள் இருந்தால், அதை விரைவில் எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் அதை செயல் திட்டத்தில் சோ்க்கிறோம். தில்லியின் மாசுவைக் குறைப்பதே எங்கள் நோக்கம் என்று அக்கடிதத்தில் அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.