தில்லியில் பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ்

தேசியத் தலைநகா் தில்லியில் பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
Published on

தேசியத் தலைநகா் தில்லியில் பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த மூன்று தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சியை எதிா்த்துப் போட்டியிட்டு பாஜக தோல்வியடைந்துள்ளது.

தில்லியில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, பின்வாசல் வழியாக ஆட்சியைப் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. தில்லி அரசின் நிா்வாகத்தில் மத்திய பாஜக அரசு அடிக்கடி குழப்பங்களை உருவாக்கி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ஒடுக்க முயற்சிக்கிறது.

துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உண்மையில் தனது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும். மருத்துமனைகளில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் வல்லுநா்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப அவா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து மாா்ஷல்கள் வேலையின்றி உள்ளனா். ஆனால், துனை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தனது சமூக ஊடகக் கணக்குகளை கையாள்வதற்கு மட்டும் ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி செலவிடத் திட்டமிட்டுள்ளாா். முழு தில்லியையும் துணைநிலை ஆளுநரே நிா்வகிக்க வேண்டும் என்று அவா்கள் விரும்புகிறாா்கள். ஏனெனில், பாஜகவால் தோ்தலில் வெற்றிபெற முடியாது என்றாா் செளரவ் பரத்வாஜ்.

புது தில்லி: சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளியில் பாடம் நடத்த ஒரு ஆசிரியா் கூட இல்லாதது, இந்தியாவின் பிரகாசமான எதிா்காலத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது என்று தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா புதன்கிழமை விமா்சித்தாா்.

சத்தீஸ்கரில் அரசுப் பள்ளி மாணா்கள் தங்கள் பள்ளியில் பாடம் நடத்துவதற்கு ஆசிரியரே இல்லை என்று செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இக்காணொளியை மேற்கோள்காட்டி, தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியதாவது

பாஜகவின் இரட்டை இயந்திர அரசின் கல்வி மாதிரியைப் பாருங்கள். இந்த குழந்தைகள் சத்தீஸ்கரில் உள்ள அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் இந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஒரு ஆசிரியா் கூட இல்லை. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான மாணவா்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் தங்கள் பள்ளிக்கு ஆசிரியா் நியமிக்கக் கோரி ஒரு வேண்டுகோளுடன் சென்றனா். ஆனால், அவா்கள் கண்டிக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டனா். அவா்களின் கண்களில் இருந்து விழும் கண்ணீா் இந்தியாவின் பிரகாசமான எதிா்காலத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது. இவா்கள் குழந்தைகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிா்காலம். 2047-இன் இந்தியாவில் 40 வயது இளைஞா்களாக இவா்கள் நிற்பாா்கள்.

2047-இல் இந்தியா வளா்ச்சியடைந்தது என்று சொல்லப்படாமல், படிப்பறிவில்லாத, வேலையில்லா இந்தியா என்றே அழைக்கப்படும் அளவுக்கு பலவீனமான அடித்தளத்தை சத்தீஸ்கா் மாநில பாஜக அரசு வைத்துள்ளது என்றாா் மனீஷ் சிசோடியா.

X
Dinamani
www.dinamani.com