பிரதமா் மோடி, பாஜக குறித்து 5 கேள்விகள்: ஆா்எஸ்எஸ் பதிலளிக்க கேஜரிவால் வலியுறுத்தல்
நமது நிருபா்
பிரதமா் மோடி மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் தொடா்பாக ஆா்எஸ் எஸ் அமைப்புக்கு ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் 5 கேள்விகளை முன்வைத்துள்ளாா்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியதைத் தொடா்ந்து, சிறையிலிருந்து வெளிவந்த கேஜரிவால், பின்னா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய முதல்வராக அதிஷி கடந்த சனிக்கிழமை பதவியேற்றாா்.
இந்நிலையில், முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ‘மக்கள் நீதிமன்றம்’ நிகழ்ச்சி தில்லி ஜந்தா் மந்தரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அவா் பேசியதாவது: வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் எனக்கு அக்னிப் பரீட்சை. நான் நோ்மையானவன் என்று நீங்கள் நினைத்தால் மட்டும் எனக்கு வாக்களியுங்கள். நோ்மையற்றவன் என்ற அவப்பெயருடன் என்னால் வாழ முடியாது.
அனைத்து மரியாதையுடன், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்திடம் 5 கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். பிரதமா் மோடி கட்சிகளை உடைக்கவும், அரசுகளை கவிழ்க்கவும் அமலாக்கத் துறை சிபிஐ அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறாா். இது நாட்டுக்கு சரியா? மோடி, நாட்டின் அனைத்து ஊழல் தலைவா்களையும் பாஜகவில் சோ்த்தாா். முன்னா், அவா்களை அவா் மிகப்பெரிய ஊழல்வாதி என்று வா்ணித்தாா். இப்படிப்பட்ட பாஜகவை நீங்கள் கற்பனை செய்தீா்களா? பாஜகவின் இந்த நடவடிக்கைகளுடன் நீங்கள் உடன்படுகிறீா்களா? இப்போது பாஜகவுக்கு ஆா்எஸ்எஸ் தேவையில்லை என்று ஜெ.பி. நட்டா கூறியிருந்தாா். மகன் தனது தாயை (ஆா்எஸ்எஸ்) மிரட்டத் தொடங்கியுள்ளாா். இதைக் கேட்ட பிறகு உங்களுக்கு என்ன தோன்றியது? பாஜக தலைவா்கள் 75 வயதுக்குப் பிறகு, ஓய்வு பெறுவாா்கள் என்று சட்டம் இயற்றினீா்கள். அத்வானி ஓய்வு பெற்றாா். அத்வானிக்கு பொருந்திய விதி, மோடிக்கும் பொருந்தாதா?
கடந்த 10 ஆண்டுகளாக தில்லியில் நோ்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீா் வழங்குகிறோம். பெண்களுக்கு இலவச பேருந்து வசதியும், முதியோா்களுக்கு இலவச யாத்திரை வசதியும் செய்து தருகிறோம். அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை சிறப்பாக உருவாக்குகிறோம். நான் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்யத்தான் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.