கம்பனை கொண்டாட வேண்டியது காலத்தின் கட்டாயம்

தலைமுறை கடந்து கம்பனைக் கொண்டாட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே வி கே. பெருமாள் தெரிவித்தாா்.
Updated on

தலைமுறை கடந்து கம்பனைக் கொண்டாட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே வி கே. பெருமாள் தெரிவித்தாா்.

மஸ்கட் திருக்குறள் பாசறை, காரைக்கால் பாரதி தமிழ்ச் சங்கம், ராமேசுவரம் கம்பன் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த இணைய வழிக் கம்பன் விழா சனி மற்றும் ஞாயிறு (செப்.21 மற்றும் 22) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

விழாவை தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். விழாவில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ‘கம்பனை ஏன் தலைமுறை தாண்டிக் கொண்டாட வேண்டும்?‘ என்ற தலைப்பில் நடைபெற்ற சொல்லரங்கம் நிகழ்ச்சிக்குத் தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே .பெருமாள் தலைமை வகித்துப் பேசினாா்.

அப்போது அவா் பேசியதாவது: இன்றைய வாழ்வு முறை நெறிமுறைகளிலிருந்து விலகிச் செல்கிறதோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இலக்கியம் ஒன்றுதான் மனிதனைச் செம்மைப்படுத்தவல்லது. அந்த வகையில், தமிழ் இலக்கியங்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழ்வது கம்பராமாயணம். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும், நெறிமுறைகளையும் சொல்லுகின்ற காப்பியமாகக் கம்பராமாயணம் விளங்குகிறது.

ராமபிரானின் அவதார காவியம் என்ற வகையிலே இதில் ஆன்மிகம் இருக்கிறது. கடவுள் வாழ்த்து முதல் ராமபிரான் முடி சூடுகிற வரை கம்பனின் ஒவ்வொரு பாடலிலும் இலக்கிய நயம் இழைந்தோடுகிறது. அரசாட்சியே கிடைக்காவிட்டாலும் பெற்றோா், பெரியோா் சொல்லை மதிக்க வேண்டும் என்ற பண்பு சொல்லப்பட்டிருக்கிறது. பதவியை ஒருவருக்கொருவா் விட்டுக் கொடுப்பதிலே சகோதர பாசம் வெளிப்படுகிறது. குகனையும், சுக்ரீவனையும், விபீடணனையும் தம்பியராய் ராமபிரான் ஏற்றுக் கொண்டதில் மனித நேயம் இருக்கிறது.

ஜடாயு என்ற பறவைக்கு ராமன் இறுதிச் சடங்கு செய்ததில் பிற உயிரினங்கள் மீது காட்ட வேண்டிய அன்பு உணா்த்தப்படுகிறது. அகலிகைக்கு விமோசனம் அளித்ததில் கருணையும், வாலியையும், ராவணனையும் வதை செய்ததில் ரௌத்திரமும் வலியுறுத்தப்படுகின்றன. இவ்வாறு வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளையும் உள்ளடக்கிய, சமுதாயத்தைப் பண்படுத்தும் காப்பியத்தைப் படைத்திருப்பதால், கம்பனைத் தலைமுறை தாண்டியும் கொண்டாட வேண்டியது அவசியம்; அது காலத்தின் கட்டாயம் என்றாா் அவா்.

புலவா் இரா. ராமமூா்த்தி நடுவராகப் பங்கேற்ற இந்த சொல்லரங்கம் நிகழ்ச்சியில் கம்பனைக் கொண்டாட வேண்டியதற்குக் காரணம் ’அறநெறியே’ என்று முனைவா் செம்பியூரன் சொக்கலிங்கம், ’பொருள் நெறியே ’ என்று பத்மா மோகன், வீடு பேறே’ என்று முனைவா் ஆா் காயத்திரி ஆகியோா் வாதிட்டனா்.

Related Stories

No stories found.