உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சிறார்களின் ஆபாச படம் பார்ப்பது குற்றம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

"சிறார்களின் ஆபாச படம் பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றமாகாது' என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
Published on

புது தில்லி: "சிறார்களின் ஆபாச படம் பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றமாகாது' என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து தீர்ப்பளித்தது. போக்ஸோ சட்டப்படி இது குற்றம் எனவும், எத்தகைய சூழலில் இந்தச் செயல்பாடு குற்றமாகும் என்ற விளக்கத்தையும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

200 பக்க தீர்ப்பு: இது தொடர்பாக "ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ்' என்ற சிறார் உரிமை பாதுகாப்பு அரசு சாரா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் ஆகியோர் விசாரித்து 200 பக்க தீர்ப்பை திங்கள்கிழமை அளித்தனர். அதன் விவரம் வருமாறு:

"சிறார் ஆபாச சட்டம் மற்றும் நெறிகள் தொடர்பான திருத்தங்கள் கொண்ட தகவல்களை உள்ளடக்கிய விரிவான பாலியல் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவது, சாத்தியமான குற்றவாளிகளைத் தடுக்க உதவும்.

வழிமுறைகள்: சிறார்களின் ஆபாச படங்களைப் பார்ப்பது அல்லது விநியோகச் செயல்களில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் "சிபிடி' எனப்படும் அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை அத்தகைய சிந்தனை சிதைவைத் தூண்டுவதில் பயன் தருவதாக  நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிகிச்சை திட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் பரவலைக் குறைக்க உதவும்.

இந்தப் பிரசாரத்தை கல்வித் துறையினர், மருத்துவத் துறையினர், சட்ட அமலாக்கத் துறையினர், குழந்தைகள் நல்வாழ்வுத் துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

"எனவே, சிறார்களின் ஆபாச படம் பார்ப்பது, தரவிறக்கம் செய்வது மற்றும் அதை பகிரவோ, விநியோகிக்கவோ வர்த்தக உள்நோக்கத்துடன் பயன்படுத்த நினைத்தாலோ அது சிறார் பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் (போக்ஸோ சட்டம்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குற்றச் செயல்களாகும்.

இந்த அம்சங்களைக் கருத்தில்கொண்டு சிறார் ஆபாச பட காட்சிகளைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது போக்ஸோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம்.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதில் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். உயர்நீதிமன்றம் நீக்கிய வழக்கு விசாரணையை அமர்வு நீதிமன்றம் மீண்டும் புதிதாக தொடங்க அனுமதி அளிக்கிறோம்,' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தனது கைப்பேசியில் சிறார்களின் ஆபாச படக் காட்சிகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதிவிறக்கம் செய்து பார்த்து வந்ததாக அவர் மீது அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2020-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் விசாரித்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வு, கடந்த ஜனவரி 11-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், சிறார் ஆபாச படத்தை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் சேமித்து வைப்பதும் குற்றமாகாது என்று கூறியது. அதை எதிர்த்து அரசு சாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அவசர சட்டம் இயற்ற யோசனை

போக்ஸோ சட்டப் பிரிவுகள் அமலாக்க விவகாரத்தில் உரிய திருத்தங்களுடன் கூடிய அவசர சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேலும் கூறியதாவது: போக்ஸோ சட்ட அமலாக்கம், பாதிக்கப்படுவோரின் விளைவுகளை ஆராய நியமிக்கப்படும் நிபுணர் குழு ஒரு விரிவான திட்டம் அல்லது சுகாதாரம் மற்றும் பாலியல் கல்விக்கான வழிமுறையை உருவாக்க வேண்டும். சிறார்கள் இடையே போக்ஸோ சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

"சிறார் ஆபாச படக் காட்சிகள்' என்ற சொல்லுக்குப் பதிலாக இனி 'சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம்' (சிஎஸ்இஏஎம்) போன்ற குற்றங்களின் உண்மைத் தன்மையை இன்னும் துல்லியமாக பிரதிபலிக்கும் நோக்கத்துடன் கூடிய வார்த்தையை பயன்படுத்தும் விதமாக போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பான அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.