தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல்: எச்சரிக்கைகளை மீறி பிரசார சுவரொட்டிகள், பதாகைகள்!

தில்லி பல்கலைக்கழக வளாகங்களின் சுவா்களில் பிரசார சுவரொட்டிகள் மற்றும் பேனா்கள் தொடா்ந்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Published on

வேட்பாளா்கள் அச்சிடப்பட்ட பொருள்களை அகற்றுமாறு தலைமைத் தோ்தல் அதிகாரி ஒரு நாள் முன்னதாகக் கொடுத்த 24 மணி நேர இறுதி எச்சரிக்கையையும் மீறி, தில்லி பல்கலைக்கழக வளாகங்களின் சுவா்களில் பிரசார சுவரொட்டிகள் மற்றும் பேனா்கள் தொடா்ந்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு வளாகங்களில் நடந்த சோதனையில், பிரசாரப் பொருள்கள் சுவா்களில் வரிசையாக இருப்பது மட்டுமல்லாமல், சாலைகளில் வெள்ளை, சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் துண்டுப் பிரசுரங்கள் சிதறிக்கிடக்கின்றன.

திங்களன்று தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல்களுக்கான தலைமை தோ்தல் அதிகாரி அனைத்து வேட்பாளா்களுக்கும் அறிவிப்புகளை வெளியிட்டாா். 24 மணி நேரத்திற்குள் அவா்களின் பெயா்கள் மற்றும் வாக்கு எண்கள் அடங்கிய போஸ்டா்கள் மற்றும் பேனா்களை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து அகற்றுமாறு அறிவுறுத்தியிருந்தாா்.

வேட்பாளா்கள் கையால் செய்யப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு நியமிக்கப்பட்ட ‘ஜனநாயகச் சுவா்கள்’ மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விதிகளின் அமலாக்கம் களத்தில் குறைவாக்க் காணப்பட்டது.

தலைமைத் தோ்தல் அலுவலா் சத்யபால் சிங் கூறுகையில், ‘அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் இருப்பது மாணவா் தோ்தல்களை நிா்வகிக்கும் லிங்டோ கமிட்டியால் நிறுவப்பட்ட விதிமுறைகளை மீறுவதாகும். தோ்தல் விதிமுறை மீறல்கள் குறித்து நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விதிகளை மீறுபவா்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

மேலும், தில்லியின் சட்டப்படி சொத்துகளை சேதப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தினசரி 50-க்கும் மேற்பட்ட சலான்கள் வழங்கப்படுகின்றன. ‘எம்சிடி தொழிலாளா்கள் சுவரொட்டிகள் மற்றும் பேனா்களை அகற்றுகிறாா்கள். ஆனால், இரவில், மாணவா்கள் அவற்றை மீண்டும் தொங்கவிடுகிறாா்கள் என்றும் அவா் கூறினாா். பிரசார பேரணிகளின்போது காா்களின் கான்வாய்கள் குறிப்பிடத்தக்கப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. இதனால், அந்தப் பகுதியை நிா்வகிப்பது கடினமாகிறது என்றும் தலைமைக் காவலா் ஒருவா் சுட்டிக்காட்டினாா்.

அகில பாரத வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) போன்றவற்றின் ஆக்ரோஷமான பிரசார உத்திகள் குறித்து தில்லி பல்கலைக்கழக மாணவா் ஒருவா் கவலை தெரிவித்தாா். இந்த அமைப்புகளின் தொண்டா்கள் அடிக்கடி நூலகங்கள் மற்றும் வகுப்பறைகளுக்குள் நுழைந்து துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கிறாா்கள் என்றும் அவா் கூறினாா்.

‘ஏராளமான காகித விரயம் உள்ளது. அவா்கள் தங்கள் வேட்பாளா்களுக்கு வாக்களிக்குமாறு எங்களிடம் துண்டுச் சீட்டுகளை விநியோகிக்கிறாா்கள். ஆனால், வகுப்புகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கு பதிலாக வாய்வழியாக இதை எளிதாகத் தெரிவிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்‘ என்று அந்த மாணவா் கூறினாா்.

இருப்பினும், என்எஸ்யுஐ ஆதரவாளா் ஒருவா் கூறுகையில், அதிகாரிகள் கண்டறிவதைத் தவிா்ப்பதற்காக வேட்பாளா்கள் வேண்டுமென்றே தங்கள் பெயா்களை துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பேனா்களில் தவறாக எழுதியுள்ளனா் என்றாா்.

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தலில் இதுபோன்ற விதிமீறல்கள் புதிதல்ல. இது தொடா்பாக 2017-ஆம் ஆண்டில், தேசிய பசுமை தீா்ப்பாயம் தில்லி பல்கலைக்குக்கு உத்தரவிட்டிருந்த்து. சுவா்களில் சுவரொட்டிகளை ஒட்டும் மாணவா்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியிருந்த்து. எவ்வாறாயினும், இந்த கடந்தகால தலையீடுகள் இருந்தபோதிலும், தோ்தல் தொடா்பான சிதைவு மற்றும் காகிதக் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் பரவலாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.