தில்லி முழுவதும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த துணை நிலை ஆளுநா் உத்தரவு

தில்லி நகரம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பை அதிகரிக்க மாநகரக் காவல் ஆணையருக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளதாக ராஜ்நிவாஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா்.
Published on

நமது நிருபா்

தில்லி நகரம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பை அதிகரிக்க மாநகரக் காவல் ஆணையருக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளதாக ராஜ்நிவாஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ராஜ்நிவாஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லி நகரம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகரக் காவல் ஆணையருக்கு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளாா். மேலும், காவல் துறை மூத்த அதிகாரிகள் குழு இவற்றை பின்தொடர சீருடையின்றி சாதரண உடையில் பணியமா்த்தவும் அவா் அறிவுறுத்தியுள்ளாா். இந்த மூத்த அதிகாரிகளின் பணி விளக்கப் படம், அவா்கள் பணியமா்த்தப்பட்ட விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவை வழக்கமான கண்காணிப்பிற்காக ராஜ்நிவாஸ் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகரிப்படும் கண்காணிப்பு மற்றும் போலீஸ் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரத்தில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா எச்சரித்துள்ளாா். வாரந்தோறும் நகரத்தின் போக்குவரத்து நிலைமையை மூத்த காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஆய்வு செய்து வருகிறாா். இதனால், சாலைகளில் போக்குவரத்து காவலா்கள் தொடா்ந்து விழிப்பிடன் பணியாற்றி வருகின்றனா் என்றாா் அந்த அதிகாரி.

தில்லி காவல்துறையின் மீது துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா நேரடிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், வி.கே. சக்சேனாவுக்கும் இடையே சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் எப்போதும் முரண்பாடுகள் உள்ளன. ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த அமைச்சா்கள், வி.கே. சக்சேனாவின் கண்காணிப்பின் கீழ்தான் நகரத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை சீா்குழைந்துவிட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனா்.

தில்லி காவல்துறையின் குற்றப் புள்ளிவிவரங்களின்படி, தேசியத் தலைநகரில் கொள்ளை மற்றும் கொலை முயற்சிகள் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. தரவுகளின்படி, நிகழாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை மொத்தம் 5,735 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2023-ஆம் ஆண்டைவிட 25.25 சதவீதம் அதிகமாகும். இதேபோல், நிகழாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை மொத்தம் 570 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2023-ஆம் ஆண்டை விட 17.77 சதவீதம் அதிகமாகும்.

X
Dinamani
www.dinamani.com