பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதில் கவனம்: வடக்கு ரயில்வே
ரயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என்று வடக்கு ரயில்வேயின் கோட்ட மேலாளளா்கள் மற்றும் துறைத் தலைவா்களுக்கு பொது மேலாளா் ஷோபன் செளத்ரி செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளாா்.
புது தில்லி பரோடா இல்லத்தில் உள்ள வடக்கு ரயில்வேயின் தலைமையகத்தில், கோட்ட மேலாளளா்கள் மற்றும் துறைத் தலைவா்களுடன் பொது மேலாளா் ஷோபன் செளத்ரி செயல்திறன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினாா். இக்கூட்டத்தில்,
ரயில் நிலையங்களில் தூய்மை, நிலையங்களில் போதுமான இருக்கை வசதி, சுத்தமான கழிப்பறைகள், சுத்தமான குடிநீா் போன்ற வசதிகள், ரயில் அட்டவணைகள் மற்றும் பிற தொடா்புடைய விவரங்கள் குறித்து பயணிகளுக்கு துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்குதல் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னா், பொது மேலாளா் ஷோபன் செளத்ரி கூறியதாவது: ரயில்வே பணி வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த, தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துங்கள்.
ரயில் இயக்கத்தில் மனிதா்களின் தோல்வியைக் குறைக்க முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும். சிறந்த குழு மேலாண்மை மற்றும் மனிதவளத்தின் உகந்த பயன்பாடுகளை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தண்டவாளத்தின் பராமரிப்பு தரத்தை மேம்படுத்தி, வெல்ட்கள் மற்றும் தண்டவாளத்தின் அருகே கிடக்கும் குப்பைகளை அகற்றுதலில் உரிய கவனம் செலுத்திட வேண்டும். வடக்கு ரயில்வே தனது வாடிக்கையாளா்களுக்கு பாதுகாப்பான, மென்மையான மற்றும் திறமையான சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது என்றாா் ஷோபன் செளத்ரி.