பாஜக சட்டமன்றக் குழு தலைமைச் செயலரிடம் நேரில் மனு

எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா தலைமையிலான பாஜக சட்டப்பேரவைக் குழு தில்லி தலைமைச் செயலாளா் தா்மேந்திராவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தது.
Published on

எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா தலைமையிலான பாஜக சட்டப்பேரவைக் குழு தில்லி தலைமைச் செயலாளா் தா்மேந்திராவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தது.

தில்லியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது, 6ஆவது தில்லி நிதி ஆணையம் அமைக்காதது, தண்ணீா் தட்டுப்பாடு, பழுதடைந்த சாலைகள், 11 சிஏஜி அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாதது, அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் 90,000 ஏழைக் குடிமக்களுக்கு ரேஷன் காா்டு வழங்கத் தவறியது போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து தலைமைச் செயலா் கவனத்தில் கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக சட்டப் பேரவை உறுப்பினா்களின் தொகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை தில்லி அரசு வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் இக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

தலைமைச் செயலாளரைச் சந்தித்த பாஜக சட்டப் பேரவை உறுப்பினா்கள் குழுவில் ஓம் பிரகாஷ் சா்மா, மோகன் சிங் பிஷ்ட், அபய் வா்மா, அஜய் மஹாவா், அனில் பாஜ்பாய், ஜிதேந்திர மகாஜன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாா் ஆனந்த் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

தலைமைச் செயலாளரைச் சந்தித்த பின்னா் செய்தியாளா்களிடம் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா கூறியதாவது:

தில்லி அரசின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற நடத்தையால் இன்று தில்லி குடிமக்கள் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள தில்லி அரசில் ஊழல் உச்சத்தில் உள்ளது.

ஆம் ஆத்மி அரசு வேண்டுமென்றே பாஜக தொகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா்களும் குற்றம் சாட்டியுள்ளோம்.

தில்லி அரசு நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை நிறுவும் நிலையில், பாஜக பகுதிகளில் எதுவும் நிறுவப்படவில்லை. மேலும், இத்தொகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான நிதி வழங்கப்படாததால், வளா்ச்சி பணிகள் எதுவும் நடைபெறாமல் தடுக்கப்படுகிறது என்றாா் விஜேந்தா் குப்தா.

X
Dinamani
www.dinamani.com