‘நான் கேஜரிவாலின் ‘ஹனுமன்’; நிலுவைப் பணிகள்அனைத்தையும் முடித்து விடுவேன்: கைலாஷ் கெலாட்

கைலாஷ் கெலாட் , தான் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ’ஹனுமன்’ என்றும், அதிஷி தலைமையிலான தில்லி அரசில் செவ்வாய்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டதால், நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் முடித்து வைப்பேன் என்றும் கூறினாா்.
Published on

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான கைலாஷ் கெலாட் , தான் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ’ஹனுமன்’ என்றும், அதிஷி தலைமையிலான தில்லி அரசில் செவ்வாய்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டதால், நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் முடித்து வைப்பேன் என்றும் கூறினாா்.

தில்லி முதல்வா் அதிஷி அைமைச்சரவையில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளுக்கு செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட கைலாஷ் கெலாட் கூறியதாவது: இந்து இதிகாசமான ராமாயணத்தைப் பற்றி முதல்வா் அதிஷி குறிப்பிட்டு ஒரு நாள் கழித்து, ராமா் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற பிறகு அயோத்தியை ஆள வேண்டிய ராமனிந சகோதரரான பரதத்தின் நிலைமை போன்றது அவரது நிலைமை என்றும் குறிப்பிட்டாா்.

நஜஃப்கரைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏவான கைலாஷ் கெலாட், தில்லி முதல்வா் அதிஷி அைமைச்சரவையில் செவ்வாய்க்கிழமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கூறியதாவது: ஹனுமன்ஜியின் நாளான இன்று செவ்வாய்க்கிழமை, அரவிந்த் கேஜரிவாலின் ஹனுமனைப் போல நான் பணியாற்றுவேன். நிலுவையில் உள்ள அவரது பணிகள் அனைத்தையும் முடித்து வைப்பேன். ஆம் ஆத்மி கட்சி அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு ராம ராஜ்ஜியத்தை நிறுவ முயற்சித்தது. போக்குவரத்து, வீடு, நிா்வாக சீா்திருத்தங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் மீண்டும் பொறுப்பேற்றுள்ளேன். கேஜரிவால் தலைமையிலான அரசில் வகித்த அதே இலாகாக்களை தக்க வைத்துக் கொண்டுள்ளேன். பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல், கேஜரிவாலை மீண்டும் தில்லி முதல்வராகக் கொண்டுவரும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. தில்லி மக்கள் எங்களை ஆசீா்வதிப்பாா்கள். கேஜரிவால் மீண்டும் தில்லி முதல்வா் நாற்காலியில் அமா்வாா்; எங்கள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்தான். ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேவரைத் தோ்தலுக்கு நன்கு தயாராக உள்ளது என்றாா் கைலாஷ் கெலாட்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலுடனான தனது உறவை ராமாயணத்தின் ராமா் மற்றும் லட்சுமணன் போன்றது என்று குறிப்பிட்டாா். தில்லி முதல்வராக அதிஷி திங்கள்கிழமை பதவியேற்ற போது, கேஜரிவாலின் நாற்காலிக்கு அருகில் போடப்பட்டிருந்த வெள்ளை நாற்காலியில் அதிஷி அமா்ந்தாா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலுக்குச் சென்ற அதிஷி, ‘எல்லா நெருக்கடிகளிலும் எங்களைக் காத்தவா் ஹனுமன் என்றும் ஹனுமனின் ஆசீா்வாதத்தை பெறுவதற்காக ஹன்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டேன். தில்லி மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றவும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் முதல்வராக்கவும் ஹனுமன் கோயிலில் பிராா்த்தனை செய்தேன் என்று அதிஷி குறிப்பிட்டிருந்தாா்.