மருத்துவப் பட்டதாரிகளுக்கு ஓராண்டு பணிப் பத்திரம் அறிமுகம்: தில்லி அரசு அதிரடி

தில்லியில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் இளங்கலை (யுஜி) மற்றும் முதுகலை (பிஜி) ஆகிய இரண்டிலும் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீட்டில் தோ்ச்சி பெறும் மருத்துவ மாணவா்கள் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு கட்டாய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

தில்லியில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் இளங்கலை (யுஜி) மற்றும் முதுகலை (பிஜி) ஆகிய இரண்டிலும் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீட்டில் தோ்ச்சி பெறும் மருத்துவ மாணவா்கள் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு கட்டாய சேவையை தில்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய விதிமுறையின்படி, சூப்பா் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் உள்பட இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் பட்டம் பெறும் மாணவா்கள், தில்லியின் தேசியத் தலைநகா் பிரதேசத்தின் (ஜிஎன்சிடி) அரசின் கீழ் உள்ள மருத்துவ நிறுவனங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று தில்லி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

சோ்க்கையின் போது, இளங்கலை மாணவா்கள் ரூ.15 லட்சம், முதுகலை மற்றும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மாணவா்கள் ரூ.20 லட்சத்துக்கான பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டும். ஜிஎன்சிடிடி உத்தரவில் கூறப்பட்டுள்ளபடி, ஒரு மாணவா் கட்டாய சேவைக் காலத்திலிருந்து விலகினால் இந்தப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இளங்கலை மருத்துவப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் ஜூனியா் ரெசிடென்ட் (ஜேஆா்) பதவிகளில் இடம் பெறுவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும். அதே சமயம், முதுகலை மருத்துவப் படிப்பில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு மூத்த குடியுரிமை மருத்துவா் (எஸ்ஆா்) பதவிகள் ஒதுக்கப்படும். ஜே.ஆா். மற்றும் எஸ்.ஆா்.களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையின்படி அதே அளவில் அவா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இதன்படி, சூப்பா் ஸ்பெஷாலிட்டி பட்டதாரிகள் தகுந்த உயா்வைப் பெறுவாா்கள்.

மருத்துவப் பட்டதாரிகள் தில்லியின் ஜிஎன்சிடியின் கீழ் சமூக மருத்துவமனைகள் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் பணியமா்த்தப்படுவாா்கள். மேலும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் தேவைக்கேற்ப அவா்கள் மற்ற மருத்துவமனைகளிலும் பணியமா்த்தப்படலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் (எம்.ஏ.எம்.சி.) டீன் தலைமையிலான குழு, கூடுதல் ஜே.ஆா். மற்றும் எஸ்.ஆா். தேவைப்பட்டால், புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, இந்தப் பட்டதாரிகளின் சேவைகள் அதற்கேற்ப பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

கட்டாய ஓராண்டு பணிப் பத்திரம் அடுத்த கல்வி அமா்வு முதல் அமலுக்கு வரும். அதுவரை, தற்போதைய மருத்துவப் பட்டதாரிகள், அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஊதியத்துடன், ஜிஎன்சிடி மருத்துவமனைகளில் உள்ள ஜேஆா் அல்லது எஸ்ஆா் பதவிகளை தானாக முன்வந்து எடுப்பது விருப்பத் தோ்வாக இருக்கும். இதற்கான ஊதியம் அரசு நிா்ணயித்தப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.