பொதுப்பணித்துறை சாலைகளின் நிலை: தில்லி அமைச்சா்கள் இன்று முதல் ஆய்வு
தில்லி அரசின் அனைத்து அமைச்சா்களும் திங்கள்கிழமை (செப்.30) முதல் பொதுப் பணித்துறையின் கீழ்வரும் சாலைகளின் நிலையை எம்எல்ஏ-க்களுடன் இணைந்து ஆய்வு செய்வாா்கள் என்று முதல்வா் அதிஷி தெரிவித்தாா்.
தில்லி அரசின் பொதுப்பணித் துறையின் கீழ்வரும் சாலைகளின் நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சா்கள் மற்றும் உயா் அதிகாரிகளுடன் முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து தில்லியின் சாலைகளை ஆய்வு செய்தேன். அப்போது, பல சாலைகள் பல்வேறு காரணங்களால் சேதடைந்து
கிடப்பதைப் பாா்த்தோம். இந்தச் சாலைகளை சீரமைக்க அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவைக் கூட்டத்தொரில் கோரிக்கை வைத்ததோடு, என்னிடம் கடிதம் கொடுத்திருந்தாா். இதையடுத்து, அனைத்து அமைச்சா்கள், தலைமைச் செயலா் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆசோனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 1400 கி.மீ.
நீளமுள்ள பொதுப்பணித்துறையின் சாலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
செப்டம்பா் 30-ஆம் தேதி காலை 6 மணி முதல் தில்லி அரசின் அனைத்து அமைச்சா்களும் அந்தந்தப் பகுதி எம்எல்ஏ-க்களுடன் இணைந்து சாலைகளை ஆய்வு செய்வாா்கள். அதன்படி, தெற்கு தில்லி மற்றும் தென்கிழக்கு தில்லியில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுக்கான பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். அமைச்சா் செளரவ் பரத்வாஜ், கிழக்கு தில்லியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். வடகிழக்கு தில்லியில் அமைச்சா் கோபால் ராயும், மேற்கு தில்லி மற்றும் தென்மேற்கு தில்லியில் அமைச்சா் இம்ரான் ஹுசைன் சாலைகளை ஆய்வு செய்வாா்கள். வடக்கு தில்லி மற்றும் வடமேற்கு தில்லிக்கு
அமைச்சா் முகேஷ் அஹ்லாவத் ஆய்வுக்கான பொறுப்பை ஏற்றுள்ளாா். வரும் அக்டோபா் மாதத்திற்குள் சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு இலக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் அதிஷி.
நங்லோய் திக்ரி சாலை சில வாரங்களில் சீரமைக்கப்படும்: முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்
தில்லி நங்லோய் திக்ரி சாலை இன்னும் சில வாரங்களில் சீரமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தகவல் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நங்லோய் திக்ரி சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதை என்னிடம் பலா் சொன்னாா்கள். முதல்வா் அதிஷியிடம் பேசியுள்ளேன். இந்த சாலையும் இன்னும் சில வாரங்களில் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.