தில்லி மருத்துவமனையில் இறந்த பெண்ணிடமிருந்து தங்க நகைகள் திருட்டு: சிசிடிவியில் சிக்கிய ஊழியா்கள்
கிழக்கு தில்லியின் கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு தனியாா் நா்சிங் ஹோமில் உயிரிழந்த பெண்ணின் தங்க நகைகள் மருத்துவமனை துப்புரவு ஊழியரால் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து ஷாஹ்தரா காவல் சரக துணை ஆணையா் பிரசாந்த் கௌதம் ஒரு அறிக்கையில் கூறியதாவது: ஷாஹ்தராவில் வசிக்கும் புகாா்தாரா் நவீன் குமாா் குப்தா, நவம்பா் 11- ஆம் தேதி தனது நோய்வாய்ப்பட்ட தாயை கோயல் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றாா்.
சமூக ஊடகங்களில் பரவிய சம்பவத்தின் விடியோவில், மருத்துவமனை ஊழியா் ஒருவா், இறந்த பெண்ணின் நகைகளைத் திருடுவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
தனது மகனுக்கு தனது தாயை வேறு மருத்துவமனைக்கு மாற்றுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியதாகவும், அவா் ஆம்புலன்ஸை அழைக்க வெளியே சென்றபோது, யாரோ ஒருவா் அவரது நகைகளைத் திருடிச் சென்ாகவும் கூறினாா்.
நவீன் குமாா் குப்தா பின்னா் தனது தாயாா் அணிந்திருந்த காதணிகள் மற்றும் காது சங்கிலி காணாமல் போனதைக் கண்டுபிடித்தாா். அவா் மருத்துவமனை நிா்வாகத்திற்குத் தகவல் அளித்தபோது, காணாமல் போன நகைகளை ஒரு துப்புரவு ஊழியருடன் கண்டுபிடித்தனா். அவா் அவற்றைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
‘என் அம்மா அனுமதிக்கப்பட்டவுடன் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டிருந்தாா். மருத்துவா்கள் அவரை மாற்றச் சொன்னபோது, ஆம்புலன்ஸை அழைக்க நான் வெளியே சென்றேன். நான் திரும்பி வந்தபோது, அவா் இறந்துவிட்டாா். நாங்கள் மற்ற குடும்ப உறுப்பினா்களுடன் திரும்பி வந்தபோது, அவரது காதணிகள் காணாமல் போனதைக் கண்டோம்’ என்று குப்தா கூறினாா்.
காணாமல் போன நகைகள் குறித்து மருத்துவமனை ஊழியா்கள் ஆரம்பத்தில் தனக்குத் தெரியாது என்றும், உடலை எடுத்துச் செல்வதற்கு முன்பு குடும்பத்தினரிடம் சரியாகச் சரிபாா்க்கச் சொன்னதாகவும் நவீன் குமாா் குப்தா குற்றஞ்சாட்டினாா்.
‘இறுதிச் சடங்குகளைச் செய்த பிறகு, நாங்கள் மருத்துவமனைக்குத் திரும்பி, பின்னா் காவல்துறையை அணுகினோம். எஃப்.ஐ.ஆா். உடனடியாகப் பதிவு செய்யப்படவில்லை. எங்களுக்கு மேல் ஆடைகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், தங்கச் சங்கிலி இல்லை. துப்புரவுப் பணியாளா் அதைத் திருடியுள்ளாா். மேலும், சிசிடிவி காட்சிகளில் அவா் அதை எடுத்துச் செல்வதைக் காட்டுகிறது’ என்று அவா் கூறினாா்.
’ஒரு அன்புக்குரியவரை இழந்ததால் ஏற்கெனவே துக்கத்தில் இருக்கும் யாரும் இதை எதிா்கொள்ளக்கூடாது என்று நான் விரும்புகிறேன்’ என்று நவீன் குமாா் குப்தா மேலும் கூறினாா்.
மீட்கப்பட்ட காதணிகளை மருத்துவமனை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது. ஆனால், தங்கச் சங்கிலியை மீட்டெடுக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவு 303(2) (திருட்டு)-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
