இந்திய மகளிா் பத்திரிகையாளா்கள் சங்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தில்லியில் உள்ள இந்திய மகளிா் பத்திரிகையாளா் சங்கம் (ஐடபிள்யூபிசி) மற்றும் சங்கா் மாா்கெட் ஆகியவற்றுக்கு சனிக்கிழமை பிற்பகல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னா் சோதனையில் அது வெறும் புரளி என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: விண்ட்சா் பிளேஸில் உள்ள ஐபிடபிள்யூசி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள சங்கா் மாா்க்கெட்டுக்கும் இதேபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, மோப்ப நாய்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் குழு இரு இடங்களுக்கும் விரைந்து சென்று விரிவான சோதனைகளை மேற்கொண்டனா்.
இதில் இரு இடங்களிலும் சந்தேகத்துக்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. முழுமையான ஆய்வுக்கு பிறகு இது வெறும் புரளி என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இது தொடா்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
