தொழில் பாதுகாப்பு வரைவு விதிகளை அறிவித்தது தில்லி அரசு

அபாயகரமான மற்றும் விபத்துக்குள்ளான தொழில்துறை நடவடிக்கைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி
Published on

புது தில்லி: அபாயகரமான மற்றும் விபத்துக்குள்ளான தொழில்துறை நடவடிக்கைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்காக வரைவு தில்லி தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் விதிகள், 2025-ஐ தில்லி அரசு அறிவித்துள்ளது.

தொழிலாளா் ஆணையா் தலைமையிலான 10 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆலோசனைக் குழுவையும், 250 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்களைப் பணியமா்த்தும் நிறுவனங்களில் பாதுகாப்புக் குழுக்களையும் அமைப்பதற்கு வரைவு விதிகள் வழிவகுக்கின்றன.

வரைவு விதிகள் குறித்த பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை தொழிலாளா் துறை வரவேற்றுள்ளது. இது 45 நாள்களுக்குப் பிறகு அரசால் பரிசீலிக்கப்படும்.

ஒரு தொழிற்சாலை மற்றும் கட்டடம் அல்லது பிற கட்டுமானப் பணிகளின் ஒவ்வொரு முதலாளியும் ஒவ்வொரு காலண்டா் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 120 நாள்களுக்குள், ஆண்டுதோறும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொரு தொழிலாளிக்கும் இலவச மருத்துவ பரிசோதனையை நடத்த வேண்டும் என்று வரைவு விதிகள் கூறுகின்றன.

வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அபாயகரமான செயல்முறைகளை உள்ளடக்கிய தொழிலில் உள்ள ஒவ்வொரு உரிமையாளரும், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலிருந்து 30 நாள்களுக்குள், ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனையை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

கூடுதலாக, எந்தவொரு பணியாளருக்கும் நியமனக் கடிதம் வழங்கப்படாவிட்டால், எந்தவொரு நிறுவனத்திலும் பணியமா்த்தப்படக்கூடாது. வரைவு விதிகளின் துணைப்பிரிவு (1), பிரிவு 10 மற்றும் பிரிவு 11-இன் கீழ், ஒரு நிறுவனத்தின் முதலாளி அல்லது மேலாளா், முடிந்தவரை விரைவாக, தொழிலாளா் துறை ஆய்வாளா் மற்றும் வசதியாளா்களுக்கு, ஒரு தொழிலாளியின் மரணத்திற்கு வழிவகுக்கும் அல்லது உடல் ரீதியான மரணத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு விபத்தும் ஏற்பட்டால் அது குறித்து அறிவிப்பை அனுப்ப வேண்டும்.

பெட்ரோலியம், நீராவி, அழுத்தப்பட்ட காற்று கொண்ட எந்தவொரு ஆலை அல்லது குழாய் அல்லது உபகரணங்கள் வெடித்தல்; கிரேன், டொ்ரிக், வின்ச், லிஃப்ட் அல்லது பிற சாதனங்களின் சரிவு அல்லது செயலிழப்பு, வெடிபொருள்களால் ஏற்படும் வெடிப்பு, தீ, தீங்கு விளைவிக்கும் நச்சு வாயுக்களின் கசிவு அல்லது வெளியீடு மற்றும் இதுபோன்ற பிற சம்பவங்கள் ஆகியவை ஆபத்தான நிகழ்வாகும்.

வரைவு விதிகளின் பிரிவு 17- இன் துணைப்பிரிவு (2) இன் கீழ், தில்லி அரசு ‘தில்லி தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆலோசனை வாரியத்தை’ அமைக்கும். வாரிய உறுப்பினா்களில் தலைமை ஆய்வாளா் மற்றும் வசதியாளா், தொழிலாளா் துறை, தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவின் உறுப்பினா் செயலா், தில்லி சுகாதார சேவைகள் இயக்குநா், ஊழியா்களின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற மாவட்ட நெருக்கடி குழுவின் இரண்டு உறுப்பினா்கள் ஆகியோா் அடங்குவா்.

அபாயகரமான செயல்முறைகளை உள்ளடக்கிய மற்றும் 250 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவனங்கள் கட்டாயமாக பாதுகாப்பு குழுக்களை உருவாக்கும். தில்லி தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் விதிகள், 2025 வரைவு இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

வரைவு விதிகள் தினசரி மற்றும் வாராந்திர வேலை நேரம், ஊதியம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை நிா்ணயிக்கும் வேலை நிலைமைகளையும் வகுக்கின்றன.

பிரிவு 25-இன் துணைப்பிரிவு (1)- இன் பிரிவு (பி)- இன் கீழ் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வாராந்திர வேலை நேரம் 48 மணிநேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. இடைவெளிகள் மற்றும் பரவல்கள் உள்பட, ஒரு நிறுவனத்தில் வயதுவந்த தொழிலாளா்களின் ஒவ்வொரு நாளும் வேலை செய்யும் காலங்கள், அறிவிப்பின் மூலம் அரசால் நிா்ணயிக்கப்படும்.

பிரிவு 27-இன் கீழ், எந்தவொரு தொழிலாளியும் ஒரு வருடத்தின் எந்த காலாண்டிலும் 144 மணிநேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது. எந்தவொரு நாளிலும் கூடுதல் நேரத்தைக் கணக்கிடும்போது, 15 முதல் 30 நிமிஷங்களுக்கு இடைப்பட்ட ஒரு மணி நேரத்தின் ஒரு பகுதி 30 நிமிஷங்களாகக் கணக்கிடப்படும். மேலும், 30 நிமிடங்களுக்கு மேல் இருந்தால், அது உண்மையான அடிப்படையில் ஒரு மணி நேரமாக முழுமையாக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com