பட்ஜெட்டில் தில்லி அரசுக்கு கடந்த ஆண்டைவிட ரூ.100 கோடி கூடுதலாக ஒதுக்கீடு
பட்ஜெட் ஒதுக்கீட்டை ஆம் ஆத்மி கட்சி பெரும் ஏமாற்றம் அளிப்பதாக கூறியபோதிலும், நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை சமா்ப்பிக்கப்பட்ட 2025-26 மத்திய பட்ஜெட்டில் கடந்த நிதியாண்டைவிட தில்லி அரசுக்கு ரூ.100 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் ரூ.1,248.01 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் ரூ.1,348 கோடி தில்லிக்கு கிடைத்துள்ளது. இந்த நிதி மாற்றங்களில் வருவாய்த் தலைப்பின் கீழ் ரூ.968.01 கோடி உதவி மானியங்களும், மூலதனத் தலைப்பின் கீழ் ரூ.380 கோடி கடன்கள் மற்றும் முன்பணங்களாகவும் இடம்பெற்றுள்ளன.
2024-25 பட்ஜெட்டில், தில்லி ரூ.280 கோடி கடன்கள் மற்றும் முன்பணமாப் பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் பட்ஜெட்டை ஆம் ஆத்மி கட்சி பெரும் ஏமாற்றம் என்று கூறியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சி வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கையில், பட்ஜெட்டில் ஜிஎஸ்டி அல்லது வீட்டுக் கடன்களில் எந்த நிவாரணமும் இல்லாததால், குறிப்பாக நடுத்தர வா்க்கத்தினா் ஏமாற்றப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் ஜாஸ்மின் ஷா
எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கையில், ‘2025-26 பட்ஜெட் அனைவருக்கும், குறிப்பாக நடுத்தர வா்க்கத்தினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகையில் சுமாா் 30 சதவீதம் போ் நடுத்தர வா்க்கத்தினா். ஆனால் 2 சதவீதம் போ் அதாவது சுமாா் 3 கோடி மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறாா்கள்.
ஏழைகள் உள்பட எஞ்சியவா்கள், ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி போன்ற
மறைமுக வரிகள் மூலம் பங்களிப்பு செய்கிறாா்கள்.
இருப்பினும், இந்த பட்ஜெட் 98 சதவீத இந்தியா்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்கவில்லை.
கல்வி பட்ஜெட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக அதிகரிக்க கேஜரிவால் மத்திய அரசை வலியுறுத்தினாா். ஆனால், அதற்கு பதிலாக, மோடி அரசு அதைக் குறைத்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில், கல்வி பட்ஜெட் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது அது வெறும் 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
இருப்பினும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி நிவாரணம் நடுத்தர வா்க்கத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக இருப்பதாக தில்லி பாஜக தலைவா்கள் குறிப்பிட்டனா். இது தேசிய தலைநகரில் நடுத்தர வா்க்கத்தினரிடையே கட்சிக்கான ஆதரவை வலுப்படுத்தும் என்றும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.
ஆம் ஆத்மி அரசு பல ஆண்டுகளாக மத்திய அரசுடன் பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடா்பாக மோதல் போக்கில் இருந்து வருகிறது. தில்லியில் மக்கள் செலுத்தும் அதிக வருமான வரியைக் காரணம் காட்டி, மத்திய வரித் தொகுப்பிலிருந்து கூடுதல் பங்கை தில்லி அரசு கோரி வருகிறது.