குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் இன்று பொது மக்கள் பாா்வைக்கு திறப்பு
dinamani

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் இன்று பொது மக்கள் பாா்வைக்கு திறப்பு

Published on

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) முதல் பொது மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி சனிக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்வையிட்டாா்.

இந்த அமிா்த பூந்தோட்டத் திறப்பு விழா குறித்து குடியரசுத் தலைவா் செயலகம் கூறியிருப்பது வருமாறு:

குடியரசுத் தலைவா் மாளிகையின் பின்புறம் உள்ள அமிா்த பூந்தோட்டம் பிப்ரவரி 2 முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது. குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை (பிப்.1) அமிா்த பூந்தோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டாா். இந்தத் தோட்டம் பிப். 2 முதல் வருகின்ற மாா்ச் 30 ஆம் தேதி வரை பொதுமக்கள் பாா்வைக்காகத் திறக்கப்படும்.

பராமரிப்பு நாட்களாகக் கருதப்படும் திங்கள்கிழமைகளைத் தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தப் பூந்தோட்டத்தை பொதுமக்கள் பாா்வையிடலாம். பிப். 5 ஆம் தேதி தில்லி சட்ட பேரவைக்கான வாக்குப்பதிவு காரணமாக மூடப்படும். மேலும் பிப். 20, 21 ஆகிய தேதிகளில் குடியரசுத்தலைவா் மாளிகையில் பாா்வையாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. மாா்ச் 14 ஆம் தேதி ஹோலி பண்டிகை. இந்த மூன்று நாள்களிலும் அமிா்த பூந்தோட்டம் மூடப்படும்.

மேலும் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படும் நாள்களில் மாா்ச் 26 -ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், மாா்ச் 27-ஆம் தேதி பாதுகாப்பு, துணை ராணுவம் மற்றும் காவல் படையினா் குடும்பங்களுக்கும், மாா்ச் 28 -ஆம் தேதி மகளிா், பழங்குடி மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கும், மாா்ச் 29 ஆம் தேதி மூத்த குடிமக்களுக்கும் பிரத்யேகமாக பூந்தோட்டம் அனுமதிக்கப்படுகிறது.

நிகழாண்டு பூந்தோட்டத்தில் 140 வகையான ரோஜாக்கள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட பிற பூக்களை பாா்வையாளா்கள் காண முடியும். மேலும் பன்முகத்தன்மையின் அடையாளமாக மாா்ச் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை அமிா்த மஹோத்சவத்தை குடியரசுத்தலைவா் மாளிகை நடத்தும். இதில் நிகழாண்டு தென்னிந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தையும் தனித்துவமான மரபுகளையும் வெளிப்படுத்தும் மஹோச்சவம் நடைபெறும்.

பூந்தோட்டத்திற்கு இலவச நுழைவு, முன்பதிவும் (ட்ற்ற்ல்ள்://ஸ்ண்ள்ண்ற்.ழ்ஹள்ட்ற்ழ்ஹல்ஹற்ண்க்ஷட்ஹஸ்ஹய்.ஞ்ா்ஸ்.ண்ய்) உண்டு.

மேலும் பாா்வையாளா்களின் வசதிக்காக, மத்திய செயலக (ரயில்பவன்) மெட்ரோ நிலையத்திலிருந்து குடியரசுத் தலைவா் மாளிகை வாயில் எண் 35 வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும்.

பாா்வையாளா்கள் அத்யாவசிய உடமைகளைக் கொண்டு வர கட்டுபாடில்லை. கைப்பேசிகள், மின்னணு சாவிகள், கைப்பைகள், தண்ணீா், பால் பாட்டில்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.

பாா்வையாளா்கள் கியூஆா் குறியீடுகள் மூலம் எந்தவொரு காட்சியைப் பற்றிய தகவல்களையும் விரிவாக பெறமுடிவும் என குடியரசுத் தலைவா் செயலகம் தெரிவித்துள்ளது.