நலத்திட்டங்களிலிருந்து சேமிப்பைக் கணக்கிட ஆன்லைன் போா்ட்டல்: ஆம் ஆத்மி கட்சி அறிமுகம்

Published on

ஆம் ஆத்மி கட்சி ஆன்லைன் போா்ட்டலைத் தொடங்கியது. இது தில்லி மக்கள் ஆம் ஆத்மி தலைமையிலான அரசால் வழங்கப்படும் இலவச நலத்திட்டங்களிலிருந்து தங்கள் சேமிப்பைக் கணக்கிட அனுமதிக்கிறது.

இந்த அறிவிப்பை ஒரு செய்தியாளா் கூட்டத்தில் ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் அறிவித்தாா். அப்போது அவா் பேசியாதவது: தில்லி மக்களுக்காக, இலவச மின்சாரம், இலவச தண்ணீா் மற்றும் எங்கள் இலவச நலத்திட்டங்கள் மூலம் அவா்கள் எவ்வளவு சேமிக்கிறாா்கள் என்பதைச் சரிபாா்க்கக்கூடிய இந்தப் புதிய போா்ட்டலை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசு இந்த முயற்சிகள் மூலம் குடியிருப்பாளா்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.25,000 சேமிக்க உதவுகிறது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால், சஞ்சீவானி யோஜனாவின் கீழ் மூத்த குடிமக்களுக்கு இலவச சுகாதாரம், மாணவா்களுக்கு இலவச பேருந்துப் பயணம் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50 சதவீத சலுகை உள்ளிட்ட கட்சியின் தோ்தல் அறிக்கையில் உள்ள புதிய வாக்குறுதிகள் மாதாந்திர சேமிப்பை மேலும் ரூ.10,000 அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, எங்கள் அரசு அமைந்தால், தில்லி மக்கள் மாதத்திற்கு ரூ.35,000 சேமிப்பாா்கள் என்றாா் அவா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

2020 தோ்தலில் 70 இடங்களில் 62 இடங்களைப் பெற்ற பிறகு ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் தோ்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com