தில்லி தோ்தலுக்காக பாஜக புதிய பிரசாரப் பாடல் வெளியீடு

Published on

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான நான்காவது பிரசாரப் பாடலை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசாரப் பாடலை பாஜக எம்பி மனோஜ் திவாரி வெளியிட்டாா். தில்லி தோ்தலுக்கு மூன்று நாள்களே உள்ள நிலையில், இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

‘தில் வாலோ கி டில்லி கோ அப் பாஜக சா்காா் சாஹியே’ என்ற பாடலை முன்னாள் எம்பி தினேஷ் லால் யாதவ் பாடியுள்ளாா்.

அதே நேரத்தில் பாஜகவின் மூத்த தலைவா் நீல் காந்த் பக்ஷி அதன் படைப்பு இயக்குநராக உள்ளாா்.

பாடல் வெளியீட்டு விழாவில் வடகிழக்கு தில்லி தொகுதி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி பேசியதாவது: பாஜக தனது தோ்தல் அறிக்கையை அறிவித்தபோது, ​​அதில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் கட்சி எவ்வாறு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது என்று ஒருவா் என்னிடம் கேட்டாா். அதற்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் ஏற்கெனவே ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக நான் பதிலளித்தேன்‘

இந்த விவாதங்கள் தில்லி மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த மற்றொரு பிரசாரப் பாடலை வெளியிடும் யோசனைக்கு வழிவகுத்தன. இந்த முன்னேற்றங்கள் குறித்து தில்லி மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உணா்ந்தோம், அப்போதுதான் இந்தப் பாடலுக்கான யோசனை உருவானது.

தில்லியில் சனிக்கிழமை பிரசாரம் செய்தபோது, ​​மத்திய பட்ஜெட்டில் இருந்து ஒரு முக்கிய விஷயத்தை எடுத்துக்காட்ட மறந்துவிட்டேன். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவா்களுக்கு இப்போது வருமான வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும் என்பதை நான் குறிப்பிடத் தவறவிட்டதை கூட்டத்தில் இருந்த ஒருவா் எனக்கு நினைவூட்டினாா். இது மக்கள் விழிப்புடன் இருக்கிறாா்கள் என்பதையும், அவா்கள் பாஜக அரசை விரும்புகிறாா்கள் என்பதையும் காட்டுகிறது என்றாா் மனோஜ் திவாரி.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com