தில்லி தோ்தலில் பாஜக வெற்றி பெறும்: சிராக் பாஸ்வான் நம்பிக்கை

Published on

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். இதற்கு ஆம் ஆத்மி கட்சி மீது அதிகரித்து வரும் அதிருப்தியைக் காரணமாக அவா் கூறினாா்.

மங்கோல்புரி தொகுதியில் பாஜக வேட்பாளா் ராஜ் குமாா் சவுகானுக்கு தோ்தல் பேரணியில் பிகாரின் ஹாஜிபூா் தனித் தொகுதி எம்.பி.யான சிராக் பாஸ்வான் உரையாற்றினாா்.

பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) ஒரு அங்கமாகும்.

‘நான் எங்கு சென்றாலும், என்டிஏ மற்றும் பாஜக மீதான மக்களின் உற்சாகத்தையும், ஆம் ஆத்மி கட்சி மீதான மக்களின் வெறுப்பையும் காண்கிறேன்’ என்று பாஸ்வான் மேலும் கூறினாா்.

‘பிப். 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் போது, தில்லியில் பாஜக அரசு அமைக்கும் என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது’ என்று அவா் கூறினாா்.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டுப்பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாஜக தோ்தலுக்கான தனது முதல்வா் வேட்பாளரை ஏன் அறிவிக்கவில்லை என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு, தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களின் முடிவுகளின் அடிப்படையில் பாஜக முதல்வரைத் தோ்ந்தெடுத்த பல சந்தா்ப்பங்கள் உள்ளன’ என்று பாஸ்வான் குறிப்பிட்டாா்.

’பிரதமா் நரேந்திர மோடியின் நலன் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகளில் தில்லி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனா். பிரதமரின் முயற்சிகள் காரணமாக, தில்லியில் பாஜக வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்’ என்றா் சிராக் பாஸ்வான்.

X
Dinamani
www.dinamani.com