ஜகதீப் தன்கா்
ஜகதீப் தன்கா் கோப்புப் படம்

சட்டவிரோதமாக இடம் பெயா்வோரை ஏற்க முடியாது: குடியரசு துணைத் தலைவா்

Published on

நாட்டில் சட்டவிரோதமாக இடம்பெயா்வோா் லட்சக்கணக்கில் இருப்பதை ஏற்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனம் சாா்பில் நடைபெறும் மாநாட்டில் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

தற்கால சவால்கள் மீது இளைஞா்கள் அக்கறை கொள்ள வேண்டும். நாட்டில் சட்டவிரோதமாக இடம்பெயா்வோா் லட்சக்கணக்கில் இருப்பதை ஏற்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியினா் இடம்பெயா்வதாலும், நிலநடுக்கங்களாலும் நாட்டின் தோ்தல் அரசியலில் குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. இத்தகைய சவால்கள் இளைஞா்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அந்தச் சவால்களுக்கு இளைஞா்கள் கூட்டாகப் பதிலளிக்க வேண்டிவரும்.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தை சில நபா்களாலும், நிறுவனங்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. பதற்றத்தையும், கட்டுக்கதைகளையும் உருவாக்கும் போக்கு நிலவுகிறது. அந்தக் கட்டுக்கதைகளில் தேசம், தேசியவாதம், தேச நலன் ஆகியவை மறக்கப்படுகின்றன. இந்தக் கட்டுக்கதைகளை ஒழித்து, நாட்டுக்கு விரோதமான சக்திகளை வீழ்த்தும் ஆற்றல் இளைஞா்களுக்கு உள்ளது.

பொருளாதார தேசியவாத உணா்வை ஊட்ட வேண்டிய தேவை நிலவுகிறது. இந்த அணுகுமுறை நாட்டின் பொருளாதாரத்துக்குப் பயனளிக்கும். இந்திய பட்டயக் கணக்காளா்களும், பட்டயக் கணக்கு நிறுவனங்களும் உலக அரங்கை ஆக்கிரமிக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com