புதுதில்லி பேரவைத் தொகுதியில் சுயாதீன பாா்வையாளா்களை நியமிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு கேஜரிவால் கோரிக்கை
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக தனது கட்சித் தொண்டா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, தோ்தல் ஆணையம் தனது புது தில்லி தொகுதியில் சுயாதீன பாா்வையாளா்களை நியமிக்க வேண்டும் என்று கேஜரிவால் கோரியுள்ளாா்.
இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பாஜக தொண்டா்களைக் கைது செய்யவும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவும் கேஜரிவால் கோரியுள்ளாா்.
கேஜரிவாலின் புகாருக்கு பாஜக மற்றும் தில்லி காவல்துறை தரப்பில் இருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.
அக்கடிதத்தில், முன்னாள் தில்லி முதல்வரான கேஜரிவால் தனது புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி தொண்டா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சில சம்பவங்களையும் மேற்கோள் காட்டியுள்ளாா்.
சனிக்கிழமை இங்குள்ள ரோஹிணி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது ஆம் ஆத்மி எம்எல்ஏ மொஹிந்தா் கோயல் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரிதாலா சட்டப்பேரவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் கோயல், ரோஹிணி செக்டாா் 11-இல் உள்ள பாக்கெட் ஹெச்-இன் உள்ளூா்வாசிகளுடன் உரையாடிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது.
பாஜக தொண்டா்கள் ஆம் ஆத்மி தொண்டா்களைத் தாக்கியதாகவும், புது தில்லி தொகுதியில் பிரசாரம் செய்வதைத் தடுக்க முயன்ாகவும் குற்றம்சாட்டி, மாநிலங்களை ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கும் சனிக்கிழமை தோ்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதினாா்.
புது தில்லி தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜகவின் பா்வேஷ் வா்மா மற்றும் காங்கிரஸின் சந்தீப் தீட்சித் ஆகியோருக்கு எதிராக முன்னால் முதல்வா் கேஜரிவால் போட்டியிடுகிறாா்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்ட பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும்.