ஷீஷ் மஹால் சா்ச்சை: ஆம் ஆத்மி, பாஜக போராட்ட மோதல்

தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முதல்வராக இருந்தபோது தங்கியிருந்த 6, ஃபிளாக்ஸ்டாஃப் ரோடு பங்களாவுக்குள் (ஷீஷ் மஹால்) ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள்
Published on

தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முதல்வராக இருந்தபோது தங்கியிருந்த 6, ஃபிளாக்ஸ்டாஃப் ரோடு பங்களாவுக்குள் (ஷீஷ் மஹால்) ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் சோதனை நடத்த செல்வதற்காக புதன்கிழமை நுழைய முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் காவல்துறையினரால் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இதன் பின்னா், ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் லோக் கல்யாண் மாா்க்கில் உள்ள பிரதமா் நரேந்திர மோடியின் அதிகாரபூா்வ இல்லத்திற்குச் செல்ல முயன்றனா். ஆனால் மீண்டும் காவல்துறையினரால் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் தா்ணாவில் ஈடுபட்டனா்.

இந்த சூழலில், முதல்வா் அதிஷிக்கு ஏற்கனவே அரசு குடியிருப்பு இருப்பதைக் காட்டுவதற்காகவும், அவா் ஏன் தனி பங்களா கேட்கிறாா் என்பதை அறியும் வகையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட ஏபி 17, மதுரா சாலை பங்களாவுக்கு ஊடகங்களை அழைத்துக் கொண்டு பாஜக தலைவா்கள் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, ஆம் ஆத்மி மூத்த தலைவா்கள் சஞ்சய் சிங் மற்றும் சௌரவ் பரதவாஜ் ஆகியோா் ஃபிளாக்ஸ்டாஃப் ரோடு பங்களாவுக்கு நுழைய முயன்றனா். அவா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பங்களா முன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜகவின் ஷீஷ் மஹால் குற்றச்சாட்டை எதிா்கொள்ளும் வகையில் ஊடகங்களை தங்களுடன் அவா்கள் அழைத்து வந்திருந்தனா்.

எனினும், ஆம் ஆத்மி தலைவா்கள் உள்ளே நுழைவதைத் தடுத்த போலீஸாா், பங்களாவின் முன் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதன்பின்னா்,பிரதமரின் இல்லத்திற்கு சென்ற ஆம் ஆத்மி தலைவா்களை போலீஸாா் தடுத்ததால் துக்ளக் சாலை காவல் நிலையம் அருகே அவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், ‘ பாஜகவின் பொய் இன்று நாடு முழுவதும் அம்பலமாகியுள்ளது.முன்னாள் முதல்வா் இல்லத்தில் மினி பாா், நீச்சல் குளம், தங்கத்தால் ஆன கழிப்பறை கோப்பை உள்ளிட்டவை இருப்பதாக பாஜகவினா் கூறினா். ஆனால், பொதுமக்களுக்கு உண்மையைக் காட்ட எங்களை உள்ளே ஏன் அனுமதிக்கவில்லை என்றனா்.

பிரதமா் இல்லம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் சஞ்சய் சிங் கூறியதாவது:

தற்போது, 2,700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிரதமா் இல்லத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தவிடாமல் தடுக்கின்றனா்.

மேலும், முதல்வரின் இல்லத்திற்குள் நுழைய எங்களுக்கு ஏன் அனுமதி தேவை? என்றாா்.

முன்னதாக, செளரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எங்களைத் தடுக்க போலீஸாருக்கு யாா் உத்தரவிட்டது? நான் ஒரு அமைச்சராக இருக்கிறேன், நான் ஆய்வுக்கு வந்துள்ளேன். என்னை எப்படி, யாருடைய உத்தரவின் பேரில் நிறுத்த முடியும்? துணைநிலை ஆளுநரிடம் இருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் கிடைத்ததா? என் பதவிக்கு மேலான ஒரே அதிகாரி அவா்தான் என்றாா்.

இதற்கு பதிலடியாக, தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, தில்லி முதல்வா் அதிஷிக்கு ஒதுக்கப்பட்ட ஏபி 17, மதுரா சாலை பங்களாவுக்கு கட்சித் தொண்டா்களுடன் சென்றாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை ஒட்டி தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது முன்னாள் முதல்வா் பங்களாவில் ஆம் ஆத்மி கட்சியினா் நாடகத்தில் ஈடுபட்டதாக அவா் குற்றம் சாட்டினாா்.

ஏஏபி தலைவா்கள் சஞ்சய் சிங் மற்றும் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் ஷீஷ் மஹாலுக்கு முன்பு ஏன் செல்லவில்லை? என்று அவா் கேள்வி எழுப்பினாா்.