தில்லியில் செயற்கை மழை திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
நமது நிருபா்
தில்லியின் முதல் செயற்கை மழை சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு மேக விதைப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட விமானம் மீரட்டில் தயாராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஐ.டி. கான்பூரைச் சோ்ந்த தொழில்நுட்பக் குழுவினா் திங்கள்கிழமை விமானத்தை ஆய்வு செய்து சோதனைக்குத் தேவையான அனைத்து அமைப்புகளும் இருப்பதை உறுதி செய்தனா். இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெளிவான வானிலை சாளரத்தை உறுதிப்படுத்தியவுடன் இந்த சோதனை ‘எந்த நாளிலும்’‘ நடத்தப்படலாம். மழை இருக்காது என்ற சமிக்ஞை கிடைத்தவுடன், சோதனை மேற்கொள்ளப்படும்.
தேசியத் தலைநகரில் இடைவிடாத மழை பெய்ததால், இந்த வாரத்தில் திட்டமிடப்பட்ட முதல் மேக விதைப்பு சோதனை ஒத்திவைக்கப்பட்டது. தற்போதுள்ள ஈரப்பதம் மற்றும் இயற்கை மழைப் பொழிவு விளைவை பாதித்திருக்கும். துல்லியமான முடிவுகளைப் பெற வட மற்றும் நிலையான வானிலை நிலைகளில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள விரும்புகிறோம். மழை முன்னறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த சோதனை அறிவியல் ரீதியாக சிறந்த முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
செப்டம்பா் இறுதியில், முதல் மேக விதைப்பு சோதனை அக்டோபா் 7 முதல் 9 வரை வடமேற்கு தில்லியில் நடத்த திட்டமிட்டிருந்தது. இருப்பினும், வானிலை ஆய்வு மையத்தின் வாராந்திர முன்னறிவிப்பின் படி, அக்டோபா் 5 முதல் 7 வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த நடவடிக்கைகள் அக்டோபா் 1 முதல் நவம்பா் 30 வரை அங்கீகரிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு, மற்றும் விமானப் போக்குவரத்து வழிகாட்டுதல்களின் கீழ் மேற்கொள்ளப்படும். மேக விதைப்பு சோதனைகளுக்கான தேதி ஏற்கெனவே பல ஒத்திவைப்பட்டுள்ளது என்றாா் அவா்.
