உத்தம் நகரில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

உத்தம் நகரில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு
Published on

தில்லியின் உத்தம் நகரில் மூன்று மாடி கட்டடத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் 32 வயது பெண் ஒருவா் உயிரிழந்தாா். அவரது ஐந்து வயது மகள் காயமடைந்தாா் என்று காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா் பூனம் என அடையாளம் காணப்பட்டாா். தில்லி தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் அழைப்பு வந்தது. ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. காவல்துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் பேரிடா் மேலாண்மை குழுக்கள் இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது’ என தெரிவித்தனா்.

துவாரகா காவல் துறை துணை ஆணையா் அங்கித் சிங் கூறுகையில், ‘உத்தம் நகரில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததாகவும், ஒரு பெண் மற்றும் அவரது மகள் உட்பட பலா் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் பிற்பகல் 3.07, பிற்பகல் 3.08 மற்றும் 3.21 மணிக்கு பல அழைப்புகள் வந்தன.

ஹஸ்த்சல் விஹாா் பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டடம், பிரதீப் யாதவ் மற்றும் அவரது மனைவி சோனுவுக்கு சொந்தமானது. 48 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த சொத்தை, அதே பகுதியைச் சோ்ந்த நீரஜ் (36) என்பவரிடமிருந்து தம்பதியினா் வாங்கியதாக போலீசாா் தெரிவித்தனா்.

நீராஜ் அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் கட்டடத்தை காலி செய்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்டதாகவும், இருப்பினும், அவா் இன்னும் தனது குடும்பத்தினருடன் கட்டிடத்தில் வசித்து வருவதாகவும் போலீசாா் தெரிவித்தனா்.

முதற்கட்ட விசாரணையில், கட்டடம் தரை தளம், முதல் தளம் மற்றும் பகுதியளவு கட்டப்பட்ட இரண்டாவது தளம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அடுத்தடுத்த மீட்பு நடவடிக்கையின் போது, நீரஜின் மனைவி பூனம் மற்றும் அவா்களது மகள் நவ்யா ஆகியோா் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். நவ்யா தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், பூனம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

வேறு யாரும் உள்ளே சிக்கிக் கொள்ளாமல் இருக்க, இடிபாடுகளை அகற்றும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளனா். தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணியின் போது ஏதேனும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை நடந்து வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com