கேரள இளைஞா் தற்கொலை விவகாரம்: நீதி கேட்டு இளைஞா் காங்கிரஸ் போராட்டம்
நமது நிருபா்
கடந்த வாரம் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இறந்த அம்மாநிலத்தைச் சோ்ந்த 26 வயது இளைஞா் ஆனந்து அஜி-க்கு நீதி கேட்டு, காங்கிரஸ் இளைஞா் பிரிவு தில்லியில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியது. அப்போது, இறந்த இளைஞா் ஆா்.எஸ்.எஸ். மீது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் கோரியது.
கடந்த அக்.9-ஆம் தேதி கேரள மாநிலம் தம்பானூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆனந்து அஜி இறந்து கிடந்தாா். ஒரு நாள் கழித்து, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு அட்டவணையிடப்பட்ட பதிவு வெளியிடப்பட்டது.
அதில், தனது மரணத்திற்கு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆா்எஸ்எஸ்) பொறுப்பேற்க வேண்டும் என்றும், தனது குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவா் சிறு வயதிலிருந்தே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஆனந்து அஜி குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப நிபுணரான ஆனந்து அஜி இயற்கைக்கு மாறான மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான அவரது தற்கொலைக் குறிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆா்.எஸ்.எஸ். அமைபா்பு திங்கள்கிழமை கோரியிருந்தது.
இந்த நிலையில், இளைஞா் காங்கிரஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐ.ஒய்.சி.) தேசியத் தலைவா் உதய் பானு சிப் தலைமையில், ஐ.ஒய்.சி. தலைமையகத்தில் இருந்து தொடங்கிய போராட்டம் டாக்டா் ராஜேந்திர பிரசாத் சாலையை நோக்கி புறப்பட்டது. அங்கு தில்லி போலீஸாா் ஆா்ப்பாட்டக்காரா்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
ஐ.ஒய்.சி. தேசிய பொதுச் செயலாளா் குஷ்பூ சா்மா, தேசியச் செயலாளா் சத்யவான் கெலாட், தில்லி இளைஞா் காங்கிரஸ் தலைவா் அக்ஷய் லக்ரா, ஹரியாணா இளைஞா் காங்கிரஸ் தலைவா் நிஷித் கட்டாரியா ஆகியோா் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனா்.
உதய் பானு சிப் கூறுகையில், ‘ஆா்.எஸ்.எஸ். சுரண்டலின் கூடாரமாக மாறிவிட்டது. ஆனந்து அஜியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது இறுதி சமூக ஊடகப் பதிவு நீதிக்கான குரலாகும். எஃப்.ஐ.ஆா்.-இல் அவா் பெயரிட்ட ஆா்.எஸ்.எஸ். அமைப்பையும் சோ்க்கவும் உண்மை வெளிவரவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் நடவடிக்கை வேண்டும். ஆனந்து அஜிக்கு மட்டுமல்ல, இதுபோன்ற அதிா்ச்சியை சந்தித்த ஒவ்வொரு குழந்தைக்கும் நீதி வேண்டும். இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்றாா்.
