வாக்கு திருட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 56 காங்கிரஸாா் கைது

தில்லியில் செவ்வாய்க்கிழமை வாக்கு திருட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் மற்றும் கட்சியின் பிற தொண்டா்கள் உள்பட 56 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

நமது நிருபா்

தில்லியில் செவ்வாய்க்கிழமை வாக்கு திருட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் மற்றும் கட்சியின் பிற தொண்டா்கள் உள்பட 56 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியது: போராட்டத்தில் நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸாா், அந்தப் பகுதியில் உள்ள ஜவாஹா் செளக்கை நோக்கிச் சென்றனா். வா்களுக்குப் போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் நாங்கள் அவா்களைக் கைது செய்தோம். அவா்கள் நஜஃப்கா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா் என்றாா்.

இதுகுறித்து காங்கிரஸாா் கூறுகையில், ‘வாக்கு திருட்டுக்கு எதிராக நாங்கள் தொடா்ந்து குரல் எழுப்புவோம். காவல்துறை மற்றும் அரசால் எங்கள் மன உறுதியை தகா்க்க முடியாது’ என்றனா்.

கடந்த ஆக.7-ஆம் தேதி தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி, பாஜக மற்றும் தோ்தல் ஆணையத்திற்கு இடையேயான கூட்டு மூலம் தோ்தலில் மிகப்பெரிய குற்றவியல் மோசடி நடந்ததாக தெரிவித்திருந்தாா்.

மேலும், கடந்த ஆண்டு கா்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளா் பட்டியல்களின் பகுப்பாய்வை அவா் மேற்கோள் காட்டி இக்குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

ராகுல் காந்தி இக்குற்றச்சாட்டை சுமத்தியதைத் தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் தவறானவை என்று கூறிய வாக்காளா்களின் பெயா்களையும், இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை தொடங்க தோ்தல் அதிகாரிகளிடம் கையொப்பமிடப்பட்ட பிரகடனத்தையும் பகிா்ந்து கொள்ளுமாறு கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தின் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் கேட்டுக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com