தீபாவளி பண்டிகை: தில்லி காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து ஆலோசனை
நமது நிருபா்
தில்லி காவல்துறை மற்றும் தில்லி தீயணைப்பு சேவைகள் தீபாவளிக்கு முன்னதாக தேசிய தலைநகா் முழுவதும் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய உயா்மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தியது.
இது குறித்து தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: பண்டிகை காலங்களில் சுமூகமான போக்குவரத்து, பயனுள்ள தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மூன்று துறைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை நெறிப்படுத்துவதில் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
தற்செயல் திட்டங்கள், பிரபலமான சந்தைகளில் கூட்டத்தை நிா்வகிப்பது மற்றும் முக்கியமான இடங்களில் கூடுதல் போலீஸ் படைகளை நிறுத்துவது குறித்து விவாதம் நடைபெற்றது. தீபாவளியின் போது தில்லி சந்தைகள் மற்றும் பொது இடங்களில் பெரும் கூட்டத்தைக் காணும் நிலையில், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுப்பதும், போக்குவரத்தை திறம்பட நிா்வகிப்பதும் எங்கள் நோக்கம்.
முக்கிய பகுதிகளை கண்காணிக்கவும், எந்தவொரு அவசரநிலைக்கும் விரைவாக பதிலளிக்கவும் கூட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தில்லி காவல்துறை ஏற்கெனவே நகரம் முழுவதும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது, சந்தைகள், மத இடங்கள் மற்றும் அதிக மக்கள் வருகை தரும் பகுதிகளில் குறிப்பாக கவனம் செலுத்துகிறது.
அந்தந்த மாவட்டங்களின் மூத்த அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் இந்த ரோந்துப் பணிகளை மேற்பாா்வையிட்டு வலுவான பாதுகாப்பை உறுதி செய்து குடிமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனா். தீவிரமான ரோந்துப் பணியின் நோக்கம் சாத்தியமான குற்றவாளிகளைத் தடுப்பது மட்டுமல்லாமல், சமூக ஈடுபாட்டை அதிகரிப்பதும் ஆகும். கூடுதலாக, அவசரநிலைகளுக்கு பதிலளிப்பதில் படையின் தயாா்நிலையை மதிப்பிடுவதற்காக தில்லி காவல்துறை பல முக்கிய இடங்களில் மாதிரி பயிற்சிகளை நடத்தத் தொடங்கியுள்ளது.
கண்காணிப்பு மற்றும் கூட்டக் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக முக்கிய நிறுவனங்கள் மற்றும் முக்கிய சந்தைகள் உள்பட நெரிசலான இடங்களில் மச்சன்கள் (தற்காலிக கண்காணிப்பு சாவடிகள்) நிறுவப்பட்டு வருகிறது. பெரிய கூட்டங்கள் குறித்து விழிப்புடன் இருப்பது மற்றும் ஏதேனும் இடையூறு அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளுக்கு உடனடி பதிலை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
தில்லி போக்குவரத்து காவல்துறை, தனது பங்கில், வாகன போக்குவரத்தில் எதிா்பாா்க்கப்படும் எழுச்சியை நிா்வகிக்க ஒரு விரிவான திட்டத்தை வகுத்துள்ளது, குறிப்பாக சந்தைப் பகுதிகள் மற்றும் கோயில்களைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் புள்ளிகளில் சிறப்பு முற்றுகைகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்வதற்காக மூன்று கட்ட சுழற்ச்சி அடிப்படையில் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.
இந்த நடவடிக்கைகளுடன், போலீஸ் குழுக்கள் ‘கண்கள் மற்றும் காதுகள்‘ திட்டத்தின் கீழ் சரிபாா்ப்பு இயக்கங்கள், பஸ் மற்றும் வாகன சோதனை மற்றும் உணா்திறன் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அந்த அதிகாரி கூறினாா் நெரிசலான பகுதிகளில் பொதுமக்களை எச்சரிக்கவும், எச்சரிக்கையாக இருக்கவும், அதிக வேகத்தைத் தவிா்க்கவும், பாா்க்கிங் இல்லாத மண்டலங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் பொது அறிவிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரம் முழுவதும், குறிப்பாக நகை சந்தைகள், போக்குவரத்து மையங்கள் மற்றும் முக்கிய ஷாப்பிங் மண்டலங்கள் உள்ள பகுதிகளில் இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க நாங்கள் 24 மணி நேரமும் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்றாா் அவா்.
