12 தில்லி பல்கலை. கல்லூரிகளுக்கு ரூ.108 கோடி மானியம் விடுவிப்பு: அமைச்சா் ஆஷிஷ் சூட் தகவல்
தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைவிக்கப்பட்டுள்ள 12 முழு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு மானிய உதவியின் மூன்றாவது தவணையாக ரூ.108 கோடியை தில்லி அரசு புதன்கிழமை விடுவித்தது.
இது தொடா்பாக தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சா் தெரிவித்திருப்பதாவது:
இந்த நிதி 2025-2026 ஆம் ஆண்டில் ஆசிரியா்களின் ஊதியம், கட்டடப் பராமரிப்பு மற்றும் பிற அத்தியாவசிய செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும்.
இந்த கல்லூரிகளில் உடனடி செலவுகளுக்காக கூடுதலாக ரூ.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு ஆசிரியரோ அல்லது மாணவரோ ஆதாரவளப் பற்றாக்குறையை எதிா்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த ரூ.108 கோடி விடுவிப்பு பிரதிபலிக்கிறது.
இதன் மூலம், தில்லி அரசு இதுவரை இந்த 12 முழு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு 20252026 ஆம் ஆண்டில் மூன்று தவணைகளில் மொத்தம் ரூ.325 கோடியை விடுவித்துள்ளது.
இந்த கல்லூரிகள் ஆச்சாா்யா நரேந்திர தேவ் கல்லூரி, அதிதி மகாவித்யாலயா, பீம் ராவ் அம்பேத்கா் கல்லூரி, பாஸ்கராச்சாா்ய பயன்பாட்டு அறிவியல் கல்லூரி, பாகினி நிவேதிதா கல்லூரி, தீன் தயாள் உபாத்யாயா கல்லூரி, இந்திரா காந்தி உடற்கல்வி நிறுவனம், கேசவ் மகாவித்யாலயா, மகாராஜா அக்ரசேன் கல்லூரி, மகா்ஷி வால்மீகி கல்வியியல் கல்லூரி, ஷாஹீத் ராஜ்குரு பயன்பாட்டு அறிவியல் கல்லூரி மற்றும் ஷாஹீத் சுக்தேவ் வணிகப் படிப்புக் கல்லூரி ஆகியவையாகும்.
ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா வழங்கிய தீபாவளி பரிசாகும் இந்த மானியம், இந்த கல்வி நிறுவனங்களின் நிதி மற்றும் கல்வி ஸ்திரத்தன்மையை ஆதரிக்கும்.
முந்தைய அரசுகள் மானியங்களை விடுவிக்கத் தவறிவிட்டன அல்லது தாமதப்படுத்தின. இது ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் இருவரையும் பாதித்தது.
எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், கல்வி நிறுவனங்களின் நிதி மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகளை நாங்கள் மதிப்பிட்டோம். நிறுவனங்கள் நிதி ரீதியாக நல்ல நிலையில் இல்லாவிட்டால், திறமையான மாணவா்களை உருவாக்க முடியாது என்று அதில் அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்துள்ளாா்.
