தில்லியில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

தில்லியில் உள்ள ஐந்து கண்காணிப்பு நிலையங்களில் புதன்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் பதிவாகி இருந்தது. ஓட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு அளவுகள் 300-க்கு மேல் இருந்தது.
Published on

தில்லியில் உள்ள ஐந்து கண்காணிப்பு நிலையங்களில் புதன்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் பதிவாகி இருந்தது. ஓட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு அளவுகள் 300-க்கு மேல் இருந்தது.

தில்லியில் 40 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றில் 38 நிலையங்களின் தரவுகள் கிடைத்துள்ளன.

இவற்றில், ஐந்து நிலையங்களில் உள்ள காற்று தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் இருந்தது.

ஆனந்த் விஹாா் பகுதியில் அதிகபட்ச காற்றுத் தரக் குறியீடு 345 ஆகவும், அதைத் தொடா்ந்து தில்லி பல்கலைக்கழக வடக்கு வளாகம் 307, சிஆா்ஆா்ஐ மதுரா சாலை 307, துவாரகா செக்டாா்-8 (314) மற்றும் வஜீா்பூா் 325 என பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.

அதேபோன்று, புதன்கிழமை 20 நிலையங்கள் மோசமான பிரிவிலும்,13 நிலையங்கள் மிதமான வரம்பிற்குள்ளும் காற்றின் தரத்தை பதிவு செய்திருந்தன.

செவ்வாய்க்கிழமை தில்லியின் காற்றின் தரக் குறியீடு 201 ஆக மோசமான பிரிவில் பதிவாகியிருந்தது.

காற்று போக்குவரத்து உமிழ்வு மாசுபாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பாக உள்ளது. இது மொத்த உமிழ்வுகளில் 19.8 சதவீதமாகும் என்று முடிவு ஆதரவு அமைப்பு (டிஎஸ்எஸ்) தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடையிலான காற்றின் தரக் குறியீடு ‘நல்லது’ பிரிவிலும், 51 மற்றும் 100 இடைப்பட்டது திருப்திகரமானது, 101 மற்றும் 200 இடைப்பட்டது மிதமானது, 201 மற்றும் 300 இடைப்பட்டது மோசம், 301 மற்றும் 400 இடைப்பட்டது மிகவும் மோசமானது மற்றும் 401 மற்றும் 500 கடுமையானது என்று கருதப்படுகிறது.

புதன்கிழமை தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 18.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது இயல்பை விட 1.3 டிகிரி குறைவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை காலை 8.30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 89 சதவீதமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com