நிகழாண்டில் இணையவழியில் ரூ.1,000 கோடி மோசடி: தில்லி காவல் துறை தகவல்
போலி பங்கு சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது உள்ளிட்ட இணையவழி குற்றச் சம்பவங்களில் தில்லியில் வசிக்கும் மக்களிடம் நிகழாண்டில் இதுவரை ரூ.1,000 கோடி மோசடி செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி குற்றச் சம்பவங்கள் மூலம் கடந்த ஆண்டில் தில்லிவாசிகளிடம் ரூ.1,100 கோடி மோசடி செய்யப்பட்டது. அந்தத் தொகையில் 10 சதவீதத்தை நீதிமன்ற உத்தரவு மூலமாகத் திரும்பப் பெறப்பட்டது.
நிகழாண்டில் வங்கிகளின் ஒத்துழைப்புடன் மோசடி செய்யப்பட்ட மொத்த பணத்தில் 20 சதவீதத்தை தில்லி காவல் துறையினா் மீட்டுள்ளனா்.
இணையவழி குற்றச் சம்பவங்கள் தொடா்பாக உளவு சேகரிப்பு மற்றும் வியூக நடவடிக்கைகள் துணை காவல் ஆணையா் வினீத் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இணையவழி குற்றங்கள் குறித்து உடனடியாக 1930 என்ற உதவி எண் மூலம் தகவல் தெரிவிக்குமாறு மக்களிடம் கேட்டு கொள்கிறோம். இந்தச் சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்டவா் தகவல்தெரிவித்து, பணப்பறிமாற்ற விவரங்களைத் தெரிவிக்கும்போது, மோசடி பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுப்பதைத் தடுக்க முடியும்.
இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோா் கம்போடியா, லாவோஸ், வியத்நாம் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து செயல்படுகின்றனா். இங்கிருந்து பிற நாடுகளில் உள்ள மக்களை இலக்கு வைத்து சீன நாட்டினா் இந்தக் குற்றச் செயல்களை நடத்துகின்றனா்.
மோசடி பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக போலி வங்கிக் கணக்குகள் மற்றும் சிம் அட்டைகளை இந்தியாவைச் சோ்ந்த மோசடியாளா்கள் வழங்குகின்றனா் என்றாா் அந்த அதிகாரி.
