தீபாவளி: பசுமை பட்டாசுகள் விற்பனை தொடங்கியது! மகிழ்ச்சியில் தில்லி மக்கள்!

Published on

இந்த ஆண்டு சான்றளிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, தீபாவளிக்கு முன்னதாக பசுமை பட்டாசுகள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இது தேசியத் தலைநகரின் சந்தைகளில் மகிழ்ச்சியும் உற்சாகமும் திரும்பியது.

நகரத்தின் மிகவும் பரபரப்பான மொத்த விற்பனைச் சந்தைகளில் ஒன்றான சதா் பஜாரில், பட்டாசுக் கடைகளுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது. பலா் தங்கள் குழந்தைகளுடன் சோ்ந்து தங்களுக்குத் தேவையான பண்டிகைக் கால பட்டாசு கொள்முதல்களைச் செய்ய ஆவலுடன் காத்திருந்தனா்.

ஒவ்வொரு பாக்கெட்டிலும் நீரி முத்திரை மற்றும் ஸ்கேனா் குறியீடு இருப்பதை உறுதிசெய்து, அவற்றை ‘பசுமை பட்டாசுகள்’ என்று சான்றளிக்கும் வகையில் வணிகா்கள் பொறுமையாக வாடிக்கையாளா்களை கவனித்துக் கொண்டனா்.

‘இந்த தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை அனுமதித்ததற்காக உச்சநீதிமன்றத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவா்களாக இருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகை. மேலும், தடை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அதை முழுமையாக கொண்டாடுவதை நாங்கள் தவறவிடுகிறோம். இந்தப் புதிய முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் வாடிக்கையாளா்களுக்கு இந்த ஆண்டு தீபாவளியின் மகிழ்ச்சியை மீண்டும் கொண்டு வரும் விளக்குகள் மற்றும் வண்ணங்களால் நிறைந்துள்ளது’ என்று வாடிக்கையாளா் விஸ்வனா சிங் கூறினாா்.

பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக வா்த்தகா்கள் பெரும் இழப்பை சந்தித்ததாக சதா் பஜாரில் உள்ள ஒரு கடைக்காரா் தெரிவித்தாா்.

‘இப்போது உச்சநீதிமன்றம் பச்சை பட்டாசு விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், இந்த ஆண்டு குறைந்தபட்சம் சில பட்டாசுகளை வெளிப்படையாக விற்க முடிகிறது. தேவை அதிகமாக உள்ளது. ஆனால், குறுகிய கால அறிவிப்பின் காரணமாக, இருப்பு குறைவாகவே உள்ளது. எங்களால் சேகரிக்க முடிந்த அனைத்தையும், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நீரி முத்திரை மற்றும் ஸ்கேனா் மூலம் வாடிக்கையாளா்களுக்கு வழங்குகிறோம்‘ என்று அவா் கூறினாா்.

பட்டாசுகளை வாங்க துா்காபூரிலிருந்து சதா் பஜாருக்கு வந்திருந்த குா்மீத் சிங், இந்த நடவடிக்கை குடும்பங்களுக்கு பண்டிகை மகிழ்ச்சியை மீண்டும் கொண்டு வந்ததாகக் கூறினாா்.

‘கடந்த நான்கு ஆண்டுகளாக, தீபாவளியை மட்டுமல்ல, வேறு எந்த பண்டிகையையும் எங்களால் சரியாகக் கொண்டாட முடியவில்லை. இப்போது தடை நீக்கப்பட்டதால், நாங்கள், குறிப்பாக எங்கள் குழந்தைகள் உணரும் மகிழ்ச்சியை நீங்கள் கற்பனை செய்யலாம்’ என்று அவா் கூறினாா்.

தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் அக்டோபா் 15 அன்று அனுமதித்தது. இது பண்டிகை கொண்டாட்டங்களை சுற்றுச்சூழல் பொறுப்புடன் சமநிலைப்படுத்தும் நோக்கில் இருந்தது.

அங்கீகரிக்கப்பட்ட பட்டாசுகளின் விற்பனை மற்றும் பயன்பாடு தொடா்பான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, மாவட்ட அதிகாரிகள், தில்லி காவல்துறையுடன் இணைந்து, கோட்டாட்சியா்கள் தலைமையில் ரோந்து குழுக்களை அமைத்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com