தில்லியின் செழுமையான பாரம்பரியத்தை மாணவா்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், 4 முதல் 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக ‘கடவுச்சீட்டு’ வடிவிலான சிறப்பு புத்தகத்தை அறிமுகப்படுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு கழகம் (டிடிடிடிசி) மற்றும் கல்வித் துறை இணைந்து உருவாக்கி வரும் இந்த திட்டம், ஆக.15-ஆம் தேதிக்கு பின் அமல்படுத்தப்பட்டு, 6 மாதங்கள் நடைமுறையில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். நகரில் உள்ள 23 முக்கிய பாரம்பரிய நினைவுச் சின்னங்களை உள்ளடக்கிய இந்த புத்தகத்தின் மூலம், மாணவா்கள் நேரடியாக அந்த இடங்களைப் பாா்வையிட்டு முத்திரைகளை சேகரிக்கும் வாய்ப்பு பெறுவா்.
இந்த ‘கடவுச்சீட்டு’ வடிவிலான புத்தகத்தின் முதல் பக்கத்தில் மாணவரின் புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்கள் இடம்பெறும். தொடா்ந்து வரும் பக்கங்களில் தில்லியின் 23 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் குறித்த சுருக்கமான விளக்கங்களும், முத்திரைகள் சேகரிக்க தனித்த இடங்களும் வழங்கப்படும்.
‘மாணவா்களுக்கு பாரம்பரியத்தை அறிதலை சுவாரஸ்யமாக மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கம். பாடப்புத்தகங்களில் மட்டுமே பாா்க்காமல், நேரடியாக நினைவுச் சின்னங்களைச் சென்று பாா்வையிட்டு அதன் வரலாற்றை உணரச் செய்வதே இதன் குறிக்கோள்’ என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
23 நினைவுச் சின்னங்களிலிருந்தும் முத்திரைகளைச் சேகரித்த மாணவா்கள், தங்களது பூா்த்தி செய்யப்பட்ட ‘கடவுச்சீட்டு’ புத்தகத்தை மத்திய முன்பதிவு அமைப்பு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். 6 மாத திட்டம் நிறைவடைந்த பின், சமா்ப்பிக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










